
கடந்த ஜனவரி மாதம் உயர்நீதிமன்ற மதுரை கிளை, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரத்திலும், உள்ளாட்சித் துறைக்கு சொந்தமான இடங்களிலும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை அடுத்த 12 வாரத்திற்குள் அகற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவின் மேல்முறையீட்டு விசாரணையிலும் பழைய உத்தரவை நீதிபதிகள் உறுதி செய்தனர்.
இந்த நிலையில் நேற்று(19.3.2024) திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அடுத்த 15 நாட்களுக்குள் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள திமுக கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் துரைமுருகனின் இந்த உத்தரவு எங்களை இக்கட்டான நிலைக்குத் தள்ளி இருப்பதாக இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தேனியில் நடைபெற்ற அக்கட்சியின் கருத்தரங்க கூட்டத்தில் பேசிய அவர், “துரைமுருகனின் இந்த அறிவிப்பு என்பது எங்களை இக்கட்டான நிலைக்கு தள்ளி இருக்கிறது. குறைந்தபட்சம் அரசியல் கட்சிகளுக்கு எதிரான இந்த தீர்ப்பு சம்பந்தமாக மாநில அரசாங்கமே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கலாம். ஆனால் அதையும் செய்யவில்லை. அல்லது தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளை அழைத்து உயர்நீதிமன்றத்தில் இருந்து இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே நாம் அடுத்து என்ன செய்வது என்று ஆலோசனை நடத்தி இருக்கலாம். ஆனால், இப்படிப்பட்ட எந்த அணுகுமுறையையும் மேற்கொள்ளாமல் தன்னிச்சையாக கொடி மரங்களை எல்லாம் நாங்களே அகற்றிக் கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.
நான் கேட்பது, இது திமுகவின் சொந்த பிரச்சனையா? மற்ற கட்சிகளிடம் கலந்து பேச வேண்டும் என்று உங்களுக்குத் தோன்ற வில்லையா? எங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. எங்களுக்கு 10 கொடி மரம் இருக்கிறது. ஆனால் திமுகவிற்கு 150 கொடி மரங்கள் இருக்கிறது.
அரசியல் கட்சி என்றால் அதற்கென்று ஒரு கொடி, கம்பம் உள்ளிட்டவைகளுக்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. நீதிபதியே கூறினாலும், போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நாங்கள் கொடி மரங்களை வைத்துக்கொள்கிறோம் என்று நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருக்க வேண்டும்” என்றார்.