
உலகின் மிக பிரபல நிறுவனமான ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர் ஒருவரின் மடியில் டீ-யை சிந்தியதற்காக ரூ.431 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் என்ற அதிரடி உத்தரவை அமெரிக்க நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த மைக்கேல் கார்சியா என்பவர், கடந்த 2020 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு தனியார் டெலிவரி நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அந்தாண்டு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் ஆர்டர் செய்த தேநீரை வாங்குவதற்காக மைக்கேல் கார்சியா வந்துள்ளார். ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் ஊழியர் ஆர்டர் செய்த தேநீரைக் கொடுத்த போது, அதன் மூடி சரிவர மூடாததால் தேநீர் மைக்கேல் கார்சியாவின் தொடையில் சிந்தியுள்ளது. இதனால் அவருக்கு கடுமையான தீ காயம் ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாக தோல் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.
இதுதொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் மைக்கேல் கார்சியா வழக்குத் தொடர்ந்தார். வழக்கின் விசாரணையில், மைக்கேல் கார்சியாவின் தொடையில் உடல் சிதைவு ஏற்பட்டு அவரது வாழ்க்கையே கேள்விக் குறியாகியுள்ளது. அவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடும் வேதனையை அனுபவித்துள்ளார். ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் ஊழியர் தேநீரை சரிவர மூடாததன் விளைவால் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று அவரது தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். மேலும் சிகிச்சை பெற்றதற்கான ஆவணக்களை முன்வைத்து மைகேல் கார்சியாவிற்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இதனிடையே வழக்கின் விசாரணைக்கு முன்பே, மைக்கேல் கார்சியாவிற்கு இழப்பீடாக ரூ.21 கோடி தருவதாக ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சார்பில் பேசப்பட்டிருக்கிறது. பின்பு அந்த தொகை ரூ.261 கோடியாக உயர்த்தி வழங்கவும் அந்நிறுவனம் முன் வைந்திருக்கிறது. இதனை ஏற்றுக்கொண்ட மைக்கேல், ஸ்டார்பக்ஸ் நிறுவனம் சம்பவத்திற்கு பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். ஆனால் அந்த நிபந்தனையை ஸ்டார்பக்ஸ் நிறுவனம் ஏற்க மறுத்துவிட்டது.
இந்த நிலையில் தான் கடந்த 5 வருடங்களாக நடந்து வந்த வழக்கின் விசாரணையில், மைக்கேல் கார்சியாவிற்கு ஸ்டார்பக்ஸ் நிறுவனம் 50 மில்லியன் அமெரிக்க டாலர்(ரூ.431 கோடி) இழப்பீடாக வழங்க வேண்டும் என்ற அதிரடி உத்தரவை நீதிமண்றம் பிறப்பித்துள்ளது. ஆனால் ஸ்டார்பக்ஸ் நிறுவனம், “இந்த சம்பவத்திற்கு நாங்கள் மட்டும் தான் காரணம் என்று நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அத்துடன் இழப்பீட்டுத் தொகையும் மிக அதிகமாக இருக்கிறது. இது தொடர்பாக மேல்முறையீடு செய்யவிருக்கிறோம்” என்று தெரித்திருக்கிறது.