தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்தர்ராஜன் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் அது குறித்து புத்தகம் வெளியிட்டு, அதன் வெளியீட்டு விழாவிலும் பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர் “என்னுடைய பணிகள் இடையூறாக இருக்கிறது என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். குடியரசு தினத்தன்று கொடியேற்ற விடவில்லை. ராஜ்பவனில் தான் கொடி ஏற்றினேன். கவர்னர் உரை ஆற்றுவதற்கு விடவில்லை. அதற்கும் சிறு காரணங்கள். ஆனால் இது எப்படி இருந்தாலும் எனது பணியில் நான் எந்த வித இடையூறுகளையும் செய்யவில்லை. மேலும் இடைவெளிகளையும் விடவில்லை.
இன்று சொல்கிறார்கள், ஆட்சியாளர்களை நான் இடையூறு செய்கிறேன் என்று. பத்ராச்சலத்தில் மழைவெள்ளம். நான் தத்தெடுத்த இரண்டு கிராமங்கள் அதற்குள் இருக்கிறது. ஏணத்திற்கு செல்கிறேன். பத்ராச்சலத்தில் வெள்ளம் வந்ததால் ஏணம் மூழ்கியது என்று சொல்கிறார்கள். உடனே பத்ராச்சலம் போகிறேன். தொலைக்காட்சிகளில் செய்திகளை போடுகிறார்கள். அடுத்த அரைமணி நேரத்தில் முதலமைச்சர் அங்கே செல்கிறார் என்ற செய்தி வருகிறது. அதுவரை தனது பங்களாவில் தூங்கிக் கொண்டு இருந்த முதல்வரை வெளியே வர வைத்த திறமை இந்த ஆளுநருக்கு இருக்கிறது என்று சொல்கிறேன்.
பல பேர் சொல்லுவார்கள். என்னைச் செதுக்கியவர்கள் என்று. ஆனால் என்னை செதுக்கியவர்களை விட ஒதுக்கியவர்கள் தான் அதிகம். இதுவரை நான் தனி விமானம் எடுத்தது இல்லை. எனக்கு தனி விமானம் எடுக்கும் உரிமை இருக்கிறது. ஹெலிகாப்டர்களை அமர்த்திக்கொள்ளும் அதிகாரமும் ஆளுநர்களுக்கு இருக்கிறது. தெலுங்கானா ராஜ்பவனில் நான் சாப்பிடுவதற்கான பணத்தை மாதம் மாதம் நான் கட்டியும் விடுகிறேன். அதையும் சொல்லிக் கொள்கிறேன்.
இன்றைக்கு சொல்கிறேன். தெலுங்கானாவிலும் முழுமையாக பணியாற்றுகிறேன். புதுச்சேரியிலும் முழுமையாக பணியாற்றுகிறேன். தமிழகத்தில் முழுமையான அன்பை செலுத்துகிறேன்.
உங்களை அங்கே விரட்டுகிறார்கள். நீங்கள் ஏன் தமிழ்நாட்டில் மூக்கை நுழைக்கிறீர்கள் எனக் கேட்கிறார்கள். இன்று சொல்கிறேன், தமிழ் நாட்டில் மூக்கையும் நுழைப்பேன், தலையையும் நுழைப்பேன், வாலையும் நுழைப்பேன், காலையும் வைப்பேன். என்னை யாரும் தடுக்க முடியாது. ” எனக் கூறினார்.