சமவேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்கள் பிரதிநிதிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால் ஆசிரியர்கள் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டத்தில் கலந்து கொண்டார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆசிரியர்களின் இந்தப் போராட்டம் புதிதாகத் துவக்கப்பட்டு நடத்தப்படவில்லை. இது பலமுறை கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு போராட்டத்திலும் நான் பங்கெடுத்துக் கொள்கிறேன்.
நீங்கள் தேர்தல் அறிக்கையில் கொடுத்தவற்றை நிறைவேற்றுங்கள் என்பதுதான் கோரிக்கை. இது ஒன்றும் அரசுக்கு எதிரானது அல்ல. சம வேலைக்கு சம ஊதியம்தான் இவர்கள் கோரிக்கை. இதை நிறைவேற்றுவேன் என்பவர் அதைச் செய்யவில்லை. தாய் தனது குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்கிறார். ஆனால் ஆசிரியர்கள்தான் உலகை அந்தக் குழந்தைக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்கள். உலக வரலாற்றை கற்பித்து குழந்தைகளுக்கு உலக வரலாற்றை காட்டுபவர்கள் ஆசிரியர்கள்தான்.
நாட்டின் வளத்தின் ஆகச்சிறந்த அறிவு கல்வி. அதைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் வீதியில் இருக்கிறார்கள் என்றால் தேசத்தின் அறிவு வீதியில் கிடக்கின்றது எனப் பொருள்” எனக் கூறினார்.