ஏப்ரல் 20 முதல் சுங்கச்சாவடிகள் மீண்டும் இயங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை வைத்துள்ளார்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 22 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை இந்தியா வைரஸ் காரணமாக 14,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,900 பேர் இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் வேகமாக பரவி வரும் இந்த கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு காலத்தில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களை கொண்டு செல்வதில் தடங்கல் இல்லாமல் இருப்பதோடு, நேரத்தை மிச்சப்படுத்தவும் சுங்கச்சாவடி கட்டண வசூல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி அறிவித்திருந்தார். இதனால் கடந்த சில வாரங்களாக சுங்கச்சாவடிகள் இயங்காமல் இருந்தன. இந்த சூழலில் ஏப்ரல் 20ம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் இயங்கும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்துவரும் சூழலில், இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கடிதம் மூலம் அமைச்சர் நிதின் கட்கரிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பான அவரது கடிதத்தில், "கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் அத்தியாவசிய பொருட்களின் விலை 2.3 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக அண்மையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் தனது உரையில் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் மீண்டும் சுங்கக்கட்டணம் வசூலிப்பது, செயல்பாட்டு செலவை அதிகரிக்கும் விதமாக இருப்பதால், விலைவாசி மேலும் அதிகரிக்கும். எனவே சுங்கக்கட்டணம் வசூலிப்பது தொடர்பான முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும் ஊரடங்கு காரணமாக ஏற்கனவே மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ள போக்குவரத்துத் துறை சார்ந்த தொழில்களை, இது மேலும் மோசமான நிலைக்கு உட்படுத்தும்" என தெரிவித்துள்ளார்.