தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறன.
அதன் தொடர்ச்சியாக, சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ஆகியோருடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தே.மு.தி.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தே.மு.தி.க. சார்பில் முன்னாள் தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் பேச்சுவார்த்தையில் பா.ம.க.வுக்கு இணையான தொகுதிகளுடன் ஒரு ராஜ்ய சபா சீட்டை தே.மு.தி.க. தரப்பு கேட்டதாகவும், இதற்கு அ.தி.மு.க. தரப்பு விஜயகாந்த் முழுவீச்சில் பரப்புரை செய்ய இயலாத சூழல், வாக்கு சதவீதம் சரிவால் தொகுதிகளைக் குறைத்துக் கொள்ள தே.மு.தி.க.விடம் கூறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மேலும், தே.மு.க.வுக்கு 14 தொகுதிகளைத் தர அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நமது முதல்வர் விஜயகாந்த், 'நமது சின்னம் முரசு என தே.மு.தி.கவின் இளைஞரணிச் செயலாளர் எல்.கே.சுதீஷ் பதிவிட்டிருந்த நிலையில், அ.தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில நாட்களில் இழுபறியில் உள்ள கூட்டணிப் பேச்சுவார்த்தை உறுதிசெய்யப்படும் எனச் சொல்லப்படுகிறது.
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கிய அ.தி.மு.க., மற்ற கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.