தி.மு.க.வின் திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்சியின் தெற்கு மாவட்ட அலுவலத்தில் நடைபெற்றது .இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாவட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "தி.மு.க. திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிக படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
கிராமப் புறத்தில் வேட்பாளர் பெயர்களை சுவர் விளம்பரம் செய்ய வேண்டும். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியது போல் தமிழ்நாட்டில் 200- க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். தேர்தலில் போட்டியிடுவது கலைஞர்தான், போட்டியிடுவது உதயசூரியன் சின்னம்தான் என்கிற சிந்தனையோடு நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும்.
ஸ்டாலின் 50 ஆண்டுகால பொது வாழ்விற்கு சொந்தக்காரர். அவர் தமிழகத்திற்கு என்ன செய்ய நினைக்கின்றாரோ? அதை செய்து முடிக்கின்ற முதல் மாவட்டமாக திருச்சி தெற்கு மாவட்டம் இருக்கும். அதேபோல் தேர்தலுக்கு குறைந்த பட்ச நாட்கள் மட்டுமே உள்ளது, எனவே தி.மு.க.வினர் கடுமையாக உழைக்க வேண்டும். உழைப்பது நாமாக இருப்போம், உதிப்பது உதயசூரியனாக இருக்க வேண்டும்" என்றார்.
இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், கவிஞர் சல்மா, கோவிந்தராஜ், செந்தில் மற்றும் ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .