கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. கரோனா பரவலின் தாக்கத்தைப் பொறுத்து அவ்வப்போது தமிழ்நாடு அரசு ஊரடங்கில் தளர்வுகள் அளித்து வருகிறது. தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 15ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வரும் செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்படவுள்ளது. விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு இறுதியில் கடலிலோ, ஆற்றிலோ கரைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது வழக்கம். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்காகப் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவிற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இன்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''அண்ணாமலை அரசியலில் மட்டுமல்ல காவல்துறையில் எப்படி இவ்வளவு நாள் பணியாற்றினார் எனச் சந்தேகமாக இருக்கிறது. ஒரு அரசை கலைப்பதற்கு சட்டத்தில் இடமே கிடையாது. முன்ன மாதிரியெல்லாம் கலைத்திட முடியாது. எஸ்.ஆர் பொம்மை கேஸ் என்ற ஒன்று இருக்கிறது. அந்த எஸ்.ஆர்.பொம்மை கேஸுக்கு பிறகு யார் நினைத்தாலும் ஆட்சியை கலைக்க முடியாது. பிள்ளையார் ஊர்வலத்திற்கு அனுமதி தரவில்லை என்பதற்காக ஆட்சியை கலைப்பேன் என்றால் இவரை போன்று அரசியலில் அரைவேக்காடு யாருமே இல்லை. இவருக்கு எப்படி ஐபிஎஸ் பணி கொடுத்தார்கள், அதையே நான் சந்தேகப்படுகிறேன். பாஜக கட்சி தலைமையில் எவ்வளவு அரசியல் அறிவில்லாத ஒருவர் இருக்கிறார் என்பதை இது காட்டுகிறது''என்றார்.
அப்பொழுது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர் தமிழகத்தில் பாஜக வலுவான எதிர்க்கட்சியாக செயல்படுவதாக சொல்கிறார்களே? என கேள்வியெழுப்ப, அதற்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, ''வலுவாக எங்க இருக்கிறது. வாழ்வில்லாததால் தானே எல்லோருடைய தயவையும் தேடிட்டு இருக்காங்க. அப்படி வலு இருக்கிறது என்ற நம்பிக்கை இருந்தால் நாலு பேர் ஜெயிச்சாங்க இல்ல அவங்கள ரிசைன் பண்ணிட்டு நிக்க சொல்லுங்க'' என்றார்.