புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 29-ஆம் தேதி ஜிப்மர் நிர்வாக இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ஜிப்மர் நிறுவனத்தில் அனைத்து வகையான பதிவேடுகளும் இனி இந்தி மொழியில் மட்டும்தான் எழுதப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த சுற்றறிக்கை இந்திய அலுவல் மொழிச் சட்டத்திற்கு எதிரானது என்றும், இது அப்பட்டமான இந்தித் திணிப்பு என்றும் கூறி பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் இந்தியை திணிக்கவில்லை என்ற தவறான தகவலை தெரிவித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
ஜிப்மர் மருத்துவமனை முன்பு புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் மத்திய அரசுக்கும், ஜிப்மர் நிர்வாகத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்தி திணிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சரும், மற்ற துறை அமைச்சர்களும் பேசவே இல்லை என்று விமர்சித்த நாராயணசாமி, துணைநிலை ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் போல் செயல்பட்டு வருகிறார் என்று குற்றம்சாட்டினார்.