திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஆறாவது முறையாக திமுக முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் பா.ம.க. வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். தொகுதி வேட்பாளரை அறிவித்ததிலிருந்தே அனைத்து கட்சி வேட்பாளர்களும் தொகுதிவாசிகளை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
திமுக சார்பில் போட்டியிடும் ஐ.பெரியசாமியும் தொகுதி மக்களை சந்தித்து வாக்கு சேகரித்துவருகிறார். இந்த நிலையில், வீரக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட வட்டப்பாறை, கூத்தம்பட்டி, மேட்டுப்பட்டி, பாரைப்பட்டி உள்பட சில பகுதிகளில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார் பெரியசாமி. அப்போது மக்கள் மத்தியில் பேசிய ஐ. பெரியசாமி, “கடந்த 32 வருடங்களாக வீரக்கல் ஊராட்சி மக்கள் எனக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறீர்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இப்பகுதி மக்கள் நலனுக்காக குடிநீர் திட்டமாக இருந்தாலும் சரி, பள்ளிக்கூட கட்டிடமாக இருந்தாலும் சரி நான் உடனடியாக அதற்கான நிதியை ஒதுக்கி உங்களின் கோரிக்கையை நிறைவேற்றி வந்துள்ளேன்.
இனியும் தொடர்ந்து உங்கள் நலனுக்காக உயிருள்ளவரை பாடுபட தயாராக உள்ளேன். அதுபோல் மே 2ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் கரோனா நிவாரணமாக குடும்பம் ஒன்றுக்கு ரூ.4,000 உடனடியாக வழங்கப்படும். இப்பகுதியில் நூற்றுக்கணக்கான முதியோர்களுக்கு பத்து வருடங்களாக அதிமுக அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உதவித்தொகையும் வழக்கம்போல் கொடுப்போம்” என்று கூறினார்.