தமிழ்நாடு பா.ஜ.க.வில் மாநில வர்த்தகர் அணி துணைத்தலைவர், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர், மாநில அளவிலான தேர்தல் செலவு கமிட்டி நிர்வாகிகளுள் ஒருவர் என இருந்தவர் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி தோல்வியடைந்த தணிகைவேல். அதிரடியாக அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கியுள்ளது கட்சித் தலைமை.
ஏன் என கட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, "நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரை பயன்படுத்தி கட்சிக்குள் 2020-ல் வந்தார். அடுத்த இரண்டு மாதங்களில் மாநில அளவில் பதவியை வாங்கினார். அப்போது மாநில தலைவராக இருந்த முருகனின் நிழல்போல் வலம் வந்தார். அவருக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து தந்தார். இவரைப் பற்றி கட்சிக்கு வந்த புகாரில் பல கோடிகள் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதனையெல்லாம் தேர்தலின் போது நக்கீரன்தான் வெளிப்படுத்தியது. அதுமட்டுமல்ல சி.பி.ஐ.யில் இவர்மீது வங்கி மோசடி வழக்கு உள்ளது. இதுபற்றி டெல்லிக்கு புகார் சென்றபோது, தணிகைவேலுக்கு சாதகமாக ஐ.பி. ரிப்போர்ட் வாங்கி மேலிடத்தை கன்வின்ஸ் செய்து தணிகைவேலுக்கு சீட் தந்தார் முருகன். வேட்பு மனு தயார் செய்தபோது லீகலான பல புகார்கள் வெளியேவர, அதிர்ச்சியாகிவிட்டோம்.
சென்னையில் இருந்து இரவோடு இரவாக திருவண்ணாமலை சென்ற மண்டல பொறுப்பாளர் கே.டி. ராகவன், மற்றொரு முக்கிய நிர்வாகி, தணிகைவேலை அவ்வளவு மோசமாக திட்டினர். வேட்பாளரை மாற்ற அப்போதும் முருகன் ஒப்புக்கொள்ளவில்லை. மனுவை தள்ளுபடி செய்யாமல் இருக்க வேண்டுமென அப்போது முதல்வராக இருந்த எடப்பாடியிடம் கேட்க, விவரத்தை தெரிந்து கொண்டவர் அ.தி.மு.க. சார்பாக வழக்கறிஞர் அன்பழகனை வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தார். மனுக்கள் பரிசீலனையின் போது தி.மு.க. வழக்கறிஞர்கள் தணிகைவேல் மனுவை எதிர்க்கவில்லை, இதனால் மனு ஏற்கப்பட்டது.
இங்குதான் எங்களுக்கு முதல் சந்தேகம். எல்லோரும் வீக்கான வேட்பாளர் என்பதால் எதிர்க்கவில்லை என்றனர். இதன்பின்னால் வேலுவின் திட்டம் ஏதாவது உள்ளதா என சந்தேக மடைந்தோம். பிரச்சாரத்தில் இருக்கும்போதே வேலுவிடம் லம்பாக டீல் போட்டார் என்கிற தகவல் எங்களுக்கு வந்தது. இதனால் திருவண்ணாமலை தொகுதிக்கு பா.ஜ.க.வின் தேசிய - மாநில முக்கிய பிரமுகர்கள் பிரச்சாரத்துக்கு வரும் பிளானை கேன்சல் செய்தோம். பிரச்சார நிதியை கையாள தனியாக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. தோல்வி உறுதி என்பதால் ஓட்டுக்கு பணம் தருவதை இந்த தொகுதியில் நிறுத்திவிட்டோம்.
மாநில தலைவராக இருந்த முருகன் மாற்றப்பட்டு அண்ணாமலை வந்ததும், முருகனுக்கு எதிரானவர்கள் அடுக்கிய புகார் பட்டியலில் தணிகைவேல் மீதான குற்றச்சாட்டுகள் பிரதானமாக இருந்தது. இந்நிலையில் ஜூலை இறுதியில் கட்சி நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலைக்கு சென்ற அண்ணாமலை, தணிகைவேல் எங்கே என கேட்டார். தேர்தலுக்கு பிறகு தலைமறைவாகிவிட்டார், கட்சியின் எந்த நிகழ்ச்சிக்கும் வருவதில்லை, மாவட்ட துணைத்தலைவர் அருணைஆனந்தன், தேர்தல் செலவுக்கு தந்த பணத்தை திருப்பிக்கேட்டதால் அவர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கும், பணமோசடி குறித்தும் விவரமாக கூறியுள்ளார்கள் நிர்வாகிகள். சென்னையில் தரப்பட்ட புகாரில் தணிகைவேல் குறித்த தகவலும், தொகுதியில் உள்ள தகவல்களையும் கண்டு அதிர்ச்சியானவர், மேலிடத்துக்கு தகவலை பாஸ் செய்துவிட்டு கட்சியில் இருந்து நீக்கிவிட்டார்'' என்றார்கள்.
தணிகைவேல் நீக்கம் பற்றிய தகவல் வெளியானதும் பட்டாசு வெடித்து கொண்டாடியது ஒருதரப்பு. பா.ஜ.க.வுக்கு தணிகைவேல் வந்தபோது, தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க.வில் இருந்த இவரது ‘விசுவாசிகளும்’பா.ஜ.க.வுக்கு வந்தனர். அவர்களிடமும் பண மோசடி செய்ததால் அவர்களும் கடுப்பில் உள்ளனர்.
முருகன் மாநில தலைவராக இருந்தபோது, கட்சிக்கு வந்தவர்கள் யார், யார்? அவர்கள் கட்சியில் என்ன பதவியில் உள்ளார்கள். அதில் பிரச்சனைக்குரியவர்கள் யார், யார்? அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகள் என்னென்ன என ஒன்றிய அமைச்சராகியுள்ள முருகனுக்கு எதிரான டீம் தயார் செய்து பா.ஜ.க.வின் புதிய தலைவர் அண்ணாமலையிடம் தந்துள்ளது. முருகன் ஆட்களை ஓரங்கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது என்கிறார்கள் பாஜகவின் உள்விவகாரம் அறிந்தவர்கள்.