விதிமுறைகளைப் பின்பற்ற முடியாவிட்டால் ஒற்றுமை யாத்திரையை நிறுத்திக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்குக் கடிதம் எழுதியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. இந்தியா முழுவதும் 12 மாநிலங்களில் 3,570 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாடி வருகிறார். கடந்த செப்.7 ஆம் தேதி துவங்கிய இந்த நடைபயணத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை அசைத்து தொடக்கி வைத்தார். இந்தியாவின் இறையாண்மையும் அரசியலமைப்புச் சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி குமரி முதல் காஷ்மீர் வரை இந்தப் பயணத்தை 150 நாட்களுக்கு மேற்கொள்ளும் ராகுல்காந்தி, ஒரு சில தினங்களுக்கு முன் ராஜஸ்தானில் யாத்திரையின் 100 ஆவது நாளை நிறைவு செய்தார்.
இந்நிலையில், ராகுல்காந்திக்கும் ராஜஸ்தான் முதல்வருக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "இந்திய ஒற்றுமை யாத்திரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்ற இயலாவிட்டால் இந்திய ஒற்றுமை யாத்திரையை பொது சுகாதாரம் கருதி நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.
அதேபோல் மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில், “சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவல் குறித்த அச்சம் மீண்டும் ஏற்பட்டுள்ள நிலையில், கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளது.