பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இல.கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.
அண்மையில் தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மணிப்பூர் ஆளுனராக தமிழக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இல.கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானாவின் ஆளுநராகவும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகவும் நியமிக்கபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த இல.கணேசன், ''வடகிழக்கு மக்களுடன் பணியாற்ற வாய்ப்பு தந்ததற்காக இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கும், இந்திய பிரதமர் மோடிக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மகிழ்ச்சியுடன் மணிப்பூர் ஆளுநர் ஆக பணியாற்றி உள்ளேன்'' என தெரிவித்துள்ளார்.