அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் திட்டத்தின் மூலம், அர்ச்சகர் பயிற்சி முடித்த 54 பேருக்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 14 ஆம் தேதி பணி நியமன ஆணையை வழங்கினார்.
சென்னை ஆர்.டி.எம்.புரத்தில் கடந்த 14ஆம் தேதி அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ், அர்ச்சகர் பயிற்சி முடித்த 24 பேர் உட்பட 58 பேருக்குப் பணி நியமன ஆணையைத் தமிழ்நாடு முதல்வர் வழங்கினார். இந்நிலையில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் திட்டத்தின் மூலம் ஏற்கனவே கோவில்களில் பணியாற்றிவந்த அர்ச்சகர்கள் பணியை இழந்து பாதிக்கப்பட்டதாக தகவல்கள் உலாவ, அதுகுறித்து தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் நேற்று (17.08.2021) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது ''முறையாகப் பயிற்சிபெற்ற 58 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 58 அர்ச்சகர்கள் நியமனம் குறித்து சிலர் அவதூறாக தவறான பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர். சில ஊடகங்களும், சில முகநூல் நண்பர்களும் இந்த விஷயத்தை ஊதி பெரிதாக்கி, ஏதோ அர்ச்சகர்களுக்கு எதிரான அரசுபோல் சித்தரிக்க நினைக்கிறார்கள். யாரையும் கோவிலில் இருந்து வெளியேற்றும் எண்ணம் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக எந்த நியமனமும் இல்லாமல் சிதிலமடைந்து கிடந்த இந்துசமய அறநிலையத்துறைக்கு முதல்வர் கொடுக்கும் சீர்திருத்தங்களுக்கு அனைவரும் ஆதரவு தெரிவித்து வலுசேர்க்க வேண்டும்'' என்றார்.
அதனையடுத்து நடந்துவரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினும், ''தமிழகக் கோவில்களில் ஏற்கனவே பணியிலுள்ள அர்ச்சகர்கள் யாரும் பணியிலிருந்து நீக்கப்படவில்லை. முன்னாள் முதல்வர் கலைஞர் கொண்டுவந்த சட்டம் நடைமுறைக்கு வராமல் இருந்தது. அதை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம்'' என விளக்கமளித்து நேற்று பேரவையில் பேசியிருந்தார்.
இந்நிலையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்ற துணையாக இருப்போம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ''சமூக நீதியை விரும்பாத சுப்ரமணியன் சுவாமி போன்றோருக்கு இந்தத் திட்டம் எரிச்சலைத் தருகிறது. மனிதன் நிலவில் கால் வைத்தாலும் கோவில் கருவறையில் கால்வைக்க முடியாது என்ற நிலை நீடித்துவந்தது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் அகில இந்திய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்ற துணையாக இருப்போம்'' என தெரிவித்துள்ளார்.