திமுக கட்சியினரின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் இல்லத் திருமண விழா சென்னை கொரட்டூரில் நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
விழாவில் பேசிய அவர், “இன்றைய தேதி பிப்ரவரி 10. இதே பிப்ரவரி 10, 1969 ஆம் ஆண்டு கலைஞர் முதல்வராக பொறுப்பேற்ற நாள். திட்டமிட்டு இந்த தேதியை திருமணத்திற்கு ஏற்பாடு செய்தாரா என்பது தெரியாது. ஆனால் பொருத்தமாக அமைந்துள்ளது. எப்பொழுதெல்லாம் கலைஞரின் பேனா குனிந்ததோ அப்பொழுதெல்லாம் தமிழகம் நிமிர்ந்துள்ளது. வருடத்திற்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவோம் என சொல்லி பிரதமர் ஆட்சிக்கு வந்தார். இது குறித்து கேள்வி கேட்டால் பதில் இல்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் 15 லட்சம் ரூபாய் உங்கள் வங்கிக் கணக்கில் போடுவோம் என பாஜக சொல்லியது. நிறைவேற்றப்பட்டுள்ளதா? 15 லட்சம் வேணாம். 15 ரூபாயாவது போட்டுள்ளார்களா? இல்லை.
கனிமொழி நாடாளுமன்றத்தில் எய்ம்ஸ் என்ன ஆச்சு என கேட்டார். 2021 பட்ஜெட்டில் அறிவித்தார்கள். அதன்பின் மதுரைக்கு வந்த மோடி அதற்கு அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்றுள்ளார். ஒரு செங்கல்லை வைத்து உதயநிதி தமிழகம் முழுவதும் சுற்றி வந்தார். அதற்கு பிறகாவது வெட்கம் வந்திருக்க வேண்டாம். மறுபடியும் தேர்தல் வருமே; இன்னொரு செங்கல்லை எடுப்பாரே என்ற பயம் வரவேண்டாம்” எனக் கூறினார்.