மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது, சங்ககாலப் புலவர்களில் ஒருவரான பிசிராந்தையாரின் கூற்று ஒன்றை நிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டினார்.
”காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,
மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போல,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.” என்ற பாடலை நிர்மலா சீதாராமன் அவையில் வாசித்தார்.
இதற்கான விளக்கத்தை அவர் அளிக்கும்போது பிரதமர் நரேந்திரமோடி, அமித்ஷா உள்பட அனைவரும் மேஜையை தட்டி வரவேற்றனர். அப்போது தமிழக எம்பிக்கள் உள்பட அனைவரும் சிரித்தனர்.
விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், ஒருமா அளவுகூட இல்லாத நிலத்தில் விளைந்த நெல்கூட பல நாட்களுக்கு யானைக்கு உணவாகும். ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால், யானை தின்பதைவிட யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும். அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும் என்று அவர் விளக்கம் அளித்தார்.
பாண்டியன் அறிவுடை நம்பிக்கு பிசிராந்தையர் கூறிய அந்த அற்புதமான அறிவுரையை இந்த அரசும் கேட்டு நடக்கிறது. யானை புகுந்த விளை நிலம் போல் வரி இருக்காது என்றார். கடந்த சில ஆண்டுகளில் நேரடி வரி கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.