Skip to main content

"உதிப்பாரா" உதயநிதி ஸ்டாலின்..?

Published on 04/07/2019 | Edited on 04/07/2019

திமுகவின் இளைஞரணியின் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். 1980ம் ஆண்டு மதுரையில் திமுகவின் இளைஞரணி தொடங்கப்படுகிறது. அதன் முதல் செயலாளராக மு.க ஸ்டாலின் நியமிக்கப்படுகிறார். ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்கும் வரையில் இளைஞரணியின் செயலாளராக கிட்டதட்ட 35 ஆண்டுகள் அந்த பொறுப்பில் இருந்துள்ளார். திமுக தலைவரான பிறகு, அந்த பொறுப்பை முன்னாள் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் வசம் ஒப்படைத்தார். சாமிநாதன் கடந்த மாதம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த நிலையில், அப்பொறுப்புக்கு உதயநிதி ஸ்டாலின் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் நியமிக்கப்படுவதற்கு முன்பாகவே, கடந்த சில மாதங்களாகவே உதயநிதியை சுற்றி பல்வேறு சர்ச்சைக்கள் எழுந்தது. உதயநிதிக்கு இளைஞரணி பொறுப்பு வழங்கப்படுமா? என்று அனைத்து தொலைக்காட்சிகளிலும் விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன. "எனக்கு எந்த பதவி வேண்டாம், திமுகவில் உறுப்பினராக இருப்பதே பெரிய மகிழ்ச்சி" என்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புவரை கூறிவந்த உதயநிதிக்கு, தற்போது திமுக இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு தரப்பட்டுள்ளது.

 

udhayanithi stalin entry to politics

 
 

திமுகவின் இரண்டாவது தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றதை போன்று, இளைஞர் அணியின் மூன்றாவது செயலாளராக உதயநிதி இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். 80-களின் ஆரம்பத்தில் மு.க ஸ்டாலின் இளைஞரணியின் செயலாளராக பொறுப்பேற்ற போது, அவருக்கு இருந்த அத்தனை சவால்களும் தற்போது உதயநிதிக்கும் உள்ளது. ஏனென்றால் அப்போதும் திமுக எதிர்கட்சியாகத்தான் இருந்தது, தற்போதும் இருக்கிறது. அப்போது திமுகவிற்கு எம்.ஜி.ஆர் என்ற ஒரு ஆளுமையே எதி்ர்வரிசையில் இருந்தார். தற்போது திரும்பிய பக்கம் எல்லாம் திமுகவை அழிக்க ஆட்கள் முளைத்துவிட்டார்கள். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் திமுகவின் மிக முக்கிய பொறுப்புக்கு வந்துள்ளார் உதயநிதி. இந்த பொறுப்புக்கு உதயநிதி தகுதியானவரா என்று ஒரு பக்கம் கேள்வி எழுந்தால், அவருக்கு என்ன தகுதியில்லை என்று எதிர்கேள்வி எழுப்புகிறார்கள் அவருக்கு நெருக்கமானவரகள். அதற்காக அவர்கள் காரணங்களையும் அடுக்குகிறார்கள். 
 

இதுகுறித்து அவர்கள் பேசும்போது, " கடந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு கேட்டு தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வர்கள் என்று பார்த்தால் அது இரண்டு பேர்தான். ஒருவர் தலைவர் ஸ்டாலின், மற்றொருவர் உதயநிதி. திமுக பெற்ற இந்த மகத்தான வெற்றிக்கு உதயநிதியும் ஒரு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. தமிழ்நாட்டில் இருக்கும் பட்டித்தொட்டியெல்லாம் உதயநிதி பிரச்சாரம் செய்தார். சொல்லப்போனால் தமிழகத்தில் அவர் காலடிபடாத நாடாளுமன்ற தொகுதியே இல்லை என்ற அளவுக்கு அனைத்து தொகுதியிலும் பிரச்சாரம் செய்தார். அந்த பிரச்சாரம் எதுவும் வீண் போகவில்லை. அது அனைத்தும் வாக்குகளாக விழுந்துள்ளது. நீங்கள் கலைஞர் போன்று ஸ்டாலினிடமும், ஸ்டாலின் போன்று உதயநிதியிடமும் செயல்பாடுகளை எதிர்பார்த்தால் அது தவறு. அவரவர்களுக்கு என்று என்று ஒரு மாடல் இருக்கிறது. ஸ்டாலினை போன்று உதயநிதியும் கடுமையான உழைப்பாளி தான். அதை கடந்த தேர்தலில் தமிழகமே நேரில் கண்டது. இனி முழுநேரமும் உதயநிதி அரசியல் பணிகளில் ஈடுபடுவார். அவர் இலக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தல்தான். 1971 ஆம் ஆண்டு திமுக பெற்ற வரலாற்று வெற்றியை முறியடித்து 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தனித்து வெற்றிபெற வேண்டும் என்பதே அவரின் இலக்கு. அதை அவர் சிறப்பாக செய்து முடிப்பார்" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.

 


 

சார்ந்த செய்திகள்