![Stalin can not manage the post says Edappadi](http://image.nakkheeran.in/cdn/farfuture/t9TUk2ya-gj81yZcr8xQUJXyZjNhHyO_gDlfJ1JoRd8/1616065108/sites/default/files/inline-images/th-1_828.jpg)
“ஜெயலலிதா மரணத்திற்கு ஸ்டாலின்தான் காரணம் என்றால் வழக்குப் போடுங்கள் சந்திப்பதற்கு நான் தயார், நீங்க தயாரா; நான் ரெடி? நீங்க ரெடியா..?” என திருவாரூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சவால்விட்டார் திமுக தலைவர் ஸ்டாலின். அதற்குப் பதிலடி கொடுப்பதுபோல “நானும் நீங்களும் ஒரே மேடையில் விவாதிக்க நான் தயார் நீங்க தயாரா?” என ஸ்டாலினுக்கு, திருவாரூர் பிரச்சாரத்தில் சவால் விட்டிருக்கிறார் எடப்பாடி.
கடந்த இரண்டு நாட்களாக டெல்டா மாவட்டங்களில் முகாமிட்டு அதிமுக வேட்பாளர்களையும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்துப் பிரச்சாரம் செய்துவருகிறார் எடப்பாடி பழனிசாமி. இதற்கிடையில், திமுக தலைவர் ஸ்டாலின், இரண்டு நாட்களுக்கு முன்பு தனது தேர்தல் பிரச்சாரத்தை கலைஞர் பிறந்த ஊரான திருவாரூரில் இருந்து துவங்கினார். மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க தெற்கு வீதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், "பத்து ஆண்டுகளாக தமிழகம் மிகவும் பின்னோக்கிச் சென்றுவிட்டது. அதிலும் இந்த நான்கு ஆண்டுகளில் அடி பாதாளத்திற்குச் சென்றுவிட்டது. தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் எடப்பாடி பழனிசாமி எதைப் பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என்பதைக்கூட தெரியாமல் பிதற்றுகிறார். ஜெயலலிதா இறப்பிற்கு கலைஞரும், ஸ்டாலினும்தான் காரனம் எனப் பேசுகிறார். நாங்கள்தான் காரனம் என்றால் நான்கு ஆண்டுகளாக என்ன செய்தீர்கள், அதுகுறித்து வழக்குப் போடுங்கள் சந்திக்க நாங்க தயார், நீங்க தயாரா, நான் ரெடி, நீங்க ரெடியா” என்று பேசினார்.
அதற்குப் பதிலடிகொடுப்பதுபோல் திருவாரூர் மாவட்டத்திற்குப் பிரச்சாரத்திற்கு வத்த பழனிசாமி பேசுகையில், “ஸ்டாலின் எது வேண்டுமானாலும் பேசுவார். இந்த தேர்தலுடன் அதிமுக காணாமல் போகிவிடும் என அவர் பேசிவருகிறார். அதிமுகவை ஒழிக்கவோ அழிக்கவோ முடியாது. ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவை அழித்துவிடலாம், ஒழித்துவிடலாம் என நினைத்தார்கள். அந்த கனவு பலிக்கவில்லை. அதிமுக கூட்டணி; வெற்றி கூட்டணி. திமுக கூட்டணி; சந்தர்ப்பவாதக் கூட்டணி.
ஸ்டாலின் போகிற இடமெல்லாம் என்னுடைய ஆட்சியைக் குறை சொல்லியே வருகிறார். செல்வ செழிப்புடன் இருந்தவர் ஸ்டாலின். உங்க அப்பா கலைஞர் உயிருடன் இருந்தவரை பதவி வழங்கவில்லை. ஏன் என்றால் உங்க மீது அவருக்கு நம்பிக்கையில்லை. உங்களால் பதவியை நிர்வகிக்க முடியாது. உங்களுடன் ஒரே மேடையில் விவாதிக்க நான் தயார், நீங்க தயாரா?” என எடப்பாடி, ஸ்டாலினுக்கு சவால்விட்டுப் பேசினார்.