நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுக்க மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதியே வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்காகத் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களது பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க.வின் அருண் நேரு போட்டியிடுகிறார். இவர் தனது பிரச்சாரத்தை துவக்கி தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று பிரச்சாரத்தை துவங்குவதற்கு முன்னதாகத் தனது தந்தை கே.என். நேருவுடன் அவர்களின் குல தெய்வமான கருப்பண்ண சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினர்.
திருச்சி மாவட்டம், முசிறி வட்டத்தில் இருக்கும் புத்தனாம்பட்டியில் உள்ள ஸ்ரீ மாவடி கருபண்ணசுவாமி, அமைச்சர் கே.என். நேருவின் குலதெய்வம். இந்தக் கோயிலில் நேற்று அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது மகனும் பெரம்பலூர் நாடாளுமன்ற தி.மு.க. வேட்பாளருமான அருண் நேரு ஆகியோர் சிறப்பு பூஜையை நடத்திவிட்டு முதற்கட்ட பிரச்சார பயணத்தை துவங்கினர்.
இந்த பிரச்சாரத்தில் அமைச்சரும், வேட்பாளர் அருண் நேருவின் தந்தையுமான கே.என். நேரு, துறையூர், புத்தனாம்பட்டி அபினிமங்கலம், துறையூர் ஒன்றியத்தில் உள்ள பகளவாடி, காளிப்பட்டி, சிங்களாந்தபுரம், கண்ணனூர், மதுராபுரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பயணம் செய்து தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் செய்தார்.
துறையூர் நகரம் பாலக்கரையில் அமைச்சர் கே.என். நேரு பேசும்போது, “துறையூர் நகரை விரிவுபடுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். தற்பொழுது புறவழிச் சாலை, குடிநீர் வசதி திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மலைவாழ் மக்களுக்கு எடை மெஷின் அமைத்து தர கூறினார்கள். உடனடியாக திமுக அரசால் செய்து தரப்பட்டுள்ளது. இதுபோல் பல திட்டங்கள் நிறைவேற தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்” எனப் பேசினார்.
பிரச்சாரத்தில் வடக்கு மாவட்டச் செயலாளர் எம்.எல்.ஏ. காடுவெட்டி தியாகராஜன், துறையூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமார், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு தீவிர பிரச்சாரம் செய்தனர்.