தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் பணபலம் கொண்ட அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து சமபலத்துடன் நேருக்கு நேராக மோதுகிறார்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள். தி.மு.க. கூட்டணியில், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில், தலா ஒரு தொகுதி வீதம், மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் நேரடியாகவே அ.தி.மு.கவுடன் மோதுகிறது.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் தொகுதியில், மறைந்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.வான ஊர்வசி செல்வராஜின் மகனும், காங்கிரஸ் முக்கியப் புள்ளியுமான ஊர்வசி அமிர்தராஜ், ஸ்ரீவைகுண்டம் அ.தி.முக.வின் சிட்டிங் எம்.எல்.ஏ.வான சண்முகநாதனை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
கடந்த தேர்தலில், தென்காசியில் போட்டியிட்டவர், நெல்லை மேற்கு மாவட்டக் காங்கிரஸ் தலைவரான பழனி நாடார். தற்போது, தென்காசி தனிமாவட்டமான போதும்கூட மீண்டும் தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார், பழனி நாடார். இவரை எதிர்த்துக் களத்திலிருப்பவர் அ.தி.மு.க.வின் சிட்டிங் எம்.எல்.ஏ.வான செல்வமோகன் தாஸ் பாண்டியன்.
அதேபோன்று, நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி தொகுதியில், கடந்த 2018 இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டவர் ரூபி மனோகரன். அந்தத் தேர்தலில் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார் ரூபி. தற்போது, மீண்டும் நாங்குநேரி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் புதிய வேட்பாளராகக் களம் காண்பவர், நெல்லை அ.தி.மு.க.வின் மா.செ.வான தச்சை கணேசராஜா.
ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, தென்காசி ஆகிய தொகுதிகள், கடந்த முறை காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது போன்றே இம்முறையும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்று தொகுதிகளின் அ.தி.மு.க. வேட்பாளர்களும் அதிகாரம் மற்றும் பண பலம் கொண்டவர்கள். அவர்களை எதிர்க்கும் காங்கிரசின் மூன்று வேட்பாளர்களும் பண பலத்தில் சளைக்காதவர்கள் தான். எனவே, பணத்தோடு பணம் மோதுவதால் களம் சூடாகும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.