



சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்றும், நாளையும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெறுகிறது. கூட்டணிக்கு கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என்று அறிவிக்கப்படாத நிலையில் இன்றைய தினம் 20 தொகுதிகளுக்கும், நாளைய தினம் 19 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெறுகிறது.
இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, வளர்மதி ஆகியோர் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்துகின்றனர்.
சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, விழுப்புரம், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துகுடி, தென்காரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்தப்பட்டது.
தேனி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் நேர்காணலில் கலந்து கொண்டார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு அளித்திருந்தபோது, ''குடும்பத்தின் பிடியிலிருந்து அதிமுகவைக் காப்பாற்ற தர்மயுத்தம் நடத்திவிட்டு இப்போது தன் மகனை தேர்தலில் போட்டியிட வைப்பது என்ன நியாயம்? ஊருக்கு ஒரு நியாயம்? ஓபிஎஸ்சுக்கு ஒரு நியாயமா?'' என தினகரன் கேள்வி எழுப்பியிருந்தார்.
அப்போது ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, ''அதிமுகவில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்க உரிமை உள்ளது. என் மகனுக்கும் தேர்தலில் நிற்க எல்லாத் தகுதியும் இருக்கிறது. ஒருவர் அரசியலில் நீடிப்பது மக்களின் கையில்தான் உள்ளது'' என்றார்.