
தூத்துக்குடியில் வீட்டில் குழந்தையோடு தனியாக வசித்து வந்த பெண்ணை நள்ளிரவில் வீடு புகுந்து இருவர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் அதே பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் போதையில் உள்ளே புகுந்துள்ளனர். இருவரும் கத்தியை காட்டி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர். இதுகுறித்து கோவில்பட்டி காவல் நிலையத்தில் பெண் புகார் அளித்திருந்தார்.
புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். ஆய்வாளர் பிரேமா தலைமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்ற போலீசார் விசாரணை செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் கொண்டுவரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

காயத்துடன் பிடிபட்ட மாரியப்பன்
விசாரணையில் மாரி செல்வம் மற்றும் மாரியப்பன் ஆகிய இருவர் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. வீரவாஞ்சி நகர் மலைப்பகுதியில் இருவரும் பதுங்கி இருந்து தெரிய வந்த நிலையில் போலீசார் பிடிக்க முயன்றனர். இதில் மாரியப்பன் கீழே விழுந்து கை, கால்களின் முறிவு ஏற்பட்டது. மாரியப்பனை பிடித்த போலீசார் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மாரி செல்வத்தை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வீட்டில் தனியாக குழந்தையுடன் இருந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடி கோவில்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.