ஒட்டன்சத்திரத்தில் தி.மு.க.வின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர்மன்றத் துணைத் தலைவர் வெள்ளைச்சாமி தலைமை தாங்கினார். உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “அண்ணா, பெரியார், கலைஞர் ஆகியோர் வழியில் ஆட்சிப் பொறுப்பேற்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்றவுடன் முத்தான 5 திட்டங்களை அறிவித்தார். அதன்படி கரோனா நிவாரண நிதி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4000 வழங்கப்பட்டது. மேலும் 14 வகையான மளிகை பொருட்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மகளிருக்கு அரசு டவுன் பஸ்களில் இலவச பயணத்திட்டத்தை அறிவித்தார். ஆவின் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. இது தவிர மருத்துவ காப்பீட்டு வசதி உங்கள் தொகுதியில் முதல்வர், மக்களை தேடி மருத்துவம் என எந்த மாநிலத்திலும் இல்லாத பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.
234 தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தமிழகம் முதன்மை மாநிலமாக மாற வேண்டும் என்ற சீரிய நோக்கத்தில் அயராது பாடுபட்டு வருகிறார். எனவே சீரிய நோக்கத்தில் அயராது பாடுபட்டு வருகிறார். எனவே தமிழக மக்கள் அவருக்கு என்றும் நல்லாதரவு தர வேண்டும்” என்று கூறினார்.
இதில் திருச்சி சிவா, திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.