கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை ஒப்பிடும் போது வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டியுள்ளது.
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம், நான்காம் கட்டம் மற்றும் ஐந்தாம் கட்டம் என வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. அதே சமயம் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளையும் (25.04.2024), இறுதி மற்றும் 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதியும் நடைபெற உள்ளன. மேலும் இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஆனைத்தும் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இன்னும் 2 கட்ட தேர்தல் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி சார்பாக காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தளப்பதிவில், “மக்களவை தேர்தல் 5 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வாக்குப்பதிவு முடிந்த 30% தொகுதிகளில், 2019 தேர்தலை ஒப்பிடும் போது வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. உதாரணமாக, 2009 ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவின் வர்தா தொகுதியில் 8 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர்; 2014 ஆம் ஆண்டு 10 லட்சம் வாக்காளர்களும், 2019 ஆம் ஆண்டு 10.7 லட்சம் வாக்காளர்களும் இருந்தனர். ஆனால் 2024 ஆம் ஆண்டில் இது 10.5 லட்சமாக குறைந்துள்ளது. 2019 தேர்தலை ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் பல தொகுதிகளில் வாக்காளர்கள் குறைந்து வருவது ஏன்?” எனக் கேள்வி எழுப்பபட்டுள்ளது.