Skip to main content

மீண்டும் 'மிஸ்' ஆன 'செங்கோட்டையன்'

Published on 24/02/2025 | Edited on 24/02/2025
 'Sengottaiyan' missed again

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா கோவை அன்னூர் அருகே கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் விவசாயிகள், அதிமுக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர். ஆனால் அதிமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான செங்கோட்டையன் கலந்துகொள்ளாதது கட்சியினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அந்த நிகழ்ச்சி தான் கலந்து கொள்ளாதது குறித்து விளக்கம் அளித்த செங்கோட்டையன் 'அதிமுகவின் முன்னோடிகளும், முன்னாள் தலைவர்களுமான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் இல்லாததே தான் கலந்து கொள்ளாததற்கு காரணம்' என தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து குள்ளபாளையத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியான நிலையில் அதனை செய்தியாளர்கள் மத்தியில் செங்கோட்டையன் முற்றிலும் மறுத்திருந்தார்.

இந்நிலையில் ஜெயலலிதா பிறந்தநாளான இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்ட நிலையில் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வராத செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தன்னுடைய அலுவலகத்திலேயே ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

சார்ந்த செய்திகள்