செந்தில் பாலாஜி வழக்கு விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் செந்தில் பாலாஜி கைது தொடர்பான 3 மனுக்கள் மீதும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்பட இருக்கிறது என்றும் இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரிய வழக்கின் தீர்ப்பு, செந்தில் பாலாஜியை காவலில் விசாரிக்கக் கோரிய அமலாக்கத்துறையின் மனு உள்ளிட்ட மூன்று மனுக்கள் மீதும் நாளை உத்தரவு வழங்கப்பட இருக்கிறது என்றும் கூறி தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்நிலையில் உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சரவணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2015 ஆம் ஆண்டு காலத்தை சார்ந்த வழக்கு அது. 2023 ஆம் ஆண்டு கைது செய்ய வேண்டிய தேவை என்ன என்று வாதங்களை முன்வைத்தோம். உச்சநீதிமன்றம் பல வழக்குகளில், ஒருவரை கைது செய்ய வேண்டும் என்றால் 41எ என்ற பிரிவின்படி நோட்டீஸ் கொடுக்கப்பட வேண்டும் எனத் தெளிவாகச் சொல்லியுள்ளது. நோட்டீஸ் கொடுக்காமல் கைது செய்தால் உடனடியாக அவரை ஜாமீனில் விட வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது. ஆனால், அமலாக்கத்துறை அப்படி ஒரு நோட்டீஸை கொடுக்கவில்லை. எங்களுக்கு 41ஏ எல்லாம் செல்லாது. நாங்கள் அதை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்கள்.
அதையும் தாண்டி முக்கியமாக செந்தில் பாலாஜியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவர் உடனடியாக காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய வேண்டும். அங்கு அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தோம். ஏனென்றால், அவருக்கு ரத்தக்குழாய் அடைப்புகள் உள்ளது. உடனடியாக அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என மருத்துவக் குழு தெரிவித்துள்ளது எனச் சொன்னோம். இதற்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஓமந்தூரார் மருத்துவமனை கொடுத்த அறிக்கையின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என நீதிமன்றத்தில் வாதிட்டார்கள். நம்பிக்கை இல்லை என்றால் அதை அஃபிடவிட்டில் போடுங்கள். உங்கள் அனைவர் மீதும் பொய் சொல்கிறீர்கள் என நடவடிக்கை எடுக்கிறோம் என என்.ஆர்.இளங்கோ சொன்னார். உடனடியாக அவர்கள் பின்வாங்கிவிட்டார்கள்.
தவறான முறையில் செந்தில் பாலாஜியை கைது செய்துவிட்டோம் என அமலாக்கத்துறையினருக்கு தெரிகிறது. அதனால் இந்த பெயில் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படக் கூடாது என்பதற்காக இன்று கஸ்டடி பெட்டிசன் போட்டுள்ளனர். அவர்களுக்கு ஈவு இரக்கம் இல்லை போலிருக்கிறது. இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளனர். ஆனால் அமலாக்கத்துறையினர் 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்யப்போவதாகச் சொல்கிறார்கள். நீதிபதி செந்தில் பாலாஜியை ஜெயிலில் வைக்க வேண்டும் என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். அதனால் ஓமந்தூரார் மருத்துவமனையில் தொடர்ந்து இருப்பார்” எனக் கூறினார்.