கூட்டம் கூட்டுவது பெரிய விஷயமில்லை, கொள்கைக்காக கூட்டம் கூட்டுவதுதான் முக்கியம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பாஜகவை விமர்சனம் செய்துள்ளார்.
கோரிப்பாளையத்தில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜு, “அதிமுகதான் எதிர்க்கட்சி. தமிழகத்தில் எப்போதுமே அதிமுக, திமுக மட்டுமே. இரண்டு கட்சிகளுக்கும் ஆயிரக்கணக்கான கிளைகள் உள்ளன. பாஜக கூட்டம் போட்டால் ஐயாயிரம், பத்தாயிரம் பேர்கூட வரலாம். கூட்டம் கூட்டுவது பெரிய விஷயமில்லை. இது காக்கா கூட்டம். இரைகளை போட்டால் காக்கா கூடத்தான் செய்யும். இரைகள் காலியாகிவிட்டால் பறந்துவிடும். நாங்கள் கூட்டுவது காக்கா கூட்டம் அல்ல. குருவிக்கூட்டம்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜு, “யாருடனும் கூட்டணி இல்லை, தனித்துப் போட்டி எனச் சொல்ல அதிமுக தயார், மற்ற கட்சிகள் தயாரா என்றும் கேள்வியெழுப்பினார்.
அண்மையில் பாஜக குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்திருந்த கருத்து அதிமுக-பாஜக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது செல்லூர் ராஜு பாஜகவை விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.