தீவிர தமிழ்தேசிய ஆதரவாளரும், ஈழம் சார்ந்த அரசியல் கள செயல்பாட்டாளருமான கடலூரைச் சேர்ந்த கடல் தீபன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 ம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது நினைவை போற்றும் வகையில் கடலூருக்குச் சென்ற நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது சமீபத்தில் பத்திரிகையாளர்களின் மண்டையை உடைப்பேன் என்று கூறியதைக் குறித்துக் கேட்ட பொழுது, "பத்திரிகையாளர்கள் பத்திரிக்கையாளர்களாக நடக்க வேண்டும். தினமும் மண்டையை உடைப்பேன் என பேசுகிறேனா. கேள்வி கேட்பவர்கள் அறிவாளி, பதில் சொல்கிறவர்கள் முட்டாள் என நினைத்துப் பேசக் கூடாது. சம்பளத்திற்கு வேலைப் பார்ப்பவர்களுக்கு கோபம் வரும் பொழுது கொள்கைக்கு வேலை செய்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கு எவ்வளவு கோபம் வரும். கேள்வி கேட்பதற்குத் தன்மை இருக்கிறது. பத்திரிகையாளர்கள் ஒன்றும் பரமாத்மா இல்லையே. தினமும் மண்டையை உடைப்பேன் என சுத்தியல் கொண்டு சுற்றுகிறேனா? அனைத்து பத்திரிகையாளர்களிடமும் அப்படிப் பேச வேண்டிய தேவை வந்ததா, பார்த்து நடந்து கொள்ளுங்கள்" என காட்டமாக பதில் அளித்துள்ளார்.