புதுக்கோட்டை மாவட்டம், அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடும் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது இயந்திரத்தில் எண்கள் மாறியிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதனால், அங்கு ‘வி.வி. பேட்’ எடுத்து வந்து சரி பார்க்கப்பட்டது.
தொடர்ந்து 2வது சுற்றிலும் 3 இயந்திரங்களில் எண்கள் இல்லாமலும், எண்கள் மாறியும் இருந்ததால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று திமுகவினர் கோரிக்கை வைத்து நிறுத்தினார்கள். தொடர்ந்து திமுக வேட்பாளர் பழனியப்பன், மா.செ. (பொ) செல்லப்பாண்டியன் ஆகியோர் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியிடம் மனு கொடுத்தனர். 2 மணி வரை வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை.
இந்த நிலையில், பேருந்து நிலையம் அருகே ஒரு லாட்ஜில் தங்கியிருந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள், திடீரென வாக்கு எண்ணும் மகளிர் கல்லூரி வரை சென்று வாக்கு எண்ணிக்கையை தொடரக் கோரி சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குவிந்த போலீசாரும், துணை ராணுவத்தினரும் அவர்களை அப்புறப்படுத்தினார்கள். மீண்டும் அவர்கள் விடுதிக்கே வந்து தங்கியுள்ளனர். நேரம் ஆக ஆக பதற்றம் நீடிக்கிறது.