சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்து, வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் காத்திருக்கிறது. 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வரும் மே 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது. இந்நிலையில், சில தொகுதிகளில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி வேலை செய்யாதது, அனுமதியின்றி ஆட்கள் நடமாட்டம், கண்டெய்னர் லாரி நிற்பது என பல்வேறு குற்றச்சாடுகளை திமுகவினர் தேர்தல் அதிகாரியிடம் புகார்களாக கொடுத்து வருகின்றனர்.
அதேவேளையில், எந்த தொகுதியிலும் அதிமுகவினர் பெரிதாக எந்தக் குற்றச்சாட்டையும் முன்வைக்காதபோது, கடந்த 22ஆம் தேதி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியைச் சந்தித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தேர்தல் வாக்கு எண்ணும் நாளில்தான் குறிப்பாக தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். அதற்கு முன்னதாக எந்தச் சூழ்நிலையிலும் வாக்கு எண்ணும் நாளுக்கு முன்னதாக ஒன்றாம் தேதி தபால் வாக்குகள் திறக்கப்பட்டு கட்டுக்கட்டாகப் பிரிக்கக் கூடாது. வாக்கு எண்ணிக்கை நாளான மே இரண்டாம் தேதிதான் திறக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் பின்பற்றப்பட்ட முறைப்படி மே இரண்டாம் தேதிதான் தபால் வாக்கு பிரிக்கப்பட்டு எண்ணப்பட வேண்டும்" என்றார்.
இது அரசியல் கட்சியினர், அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, “வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டப்படி மே 2ஆம் தேதி நடைபெறும். தபால் வாக்குகள் எண்ணும் பணி, மே 2ஆம் தேதி காலை எட்டு மணிக்குத் துவங்கும். அதனைத் தொடர்ந்து 8.30 மணி அளவில் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் கட்சியினருக்கு கரோனா பரிசோதனை தேவையா என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூரவ அறிவிப்பு வெளியாகும். வாக்கு எண்ணும் மேசைகளின் எண்ணிக்கை 14 என்பதில் எந்த மாற்றமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.