ஓபிஎஸ் பக்கம் உள்ளவர்கள் அதிமுகவிற்கு வரலாம் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுவின் நீதிமன்ற தீர்ப்பில் உற்சாகத்தில் இருக்கிறது இபிஎஸ் தரப்பு. ஆட்டம் பட்டம் கொண்டாட்டம் என அதிமுக தலைமைக் கழகம் அல்லோகலப்பட்டது. ஆனால், பொதுக்குழு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ள தீப்பினால் இடைக்காலப் பொதுச்செயலாளராக உறுதி செய்யப்பட்டுவிட்ட எடப்பாடி பழனிசாமி மதுரையில் உள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார். விழா மேடையில் பேசிய அவர் எம்ஜிஆர், ஜெயலலிதாவை வேண்டிக்கொண்ட சில நிமிடங்களில் இந்த தீர்ப்பு வெளிவந்துள்ளது என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பு வந்துள்ளது. தர்மம், நீதி, உண்மை வென்றுள்ளது. அதிமுக தொண்டர்களுக்கு இந்த தீர்ப்பு மிக மகிழ்ச்சி அளிக்கிறது. ஓபிஎஸ்ஸுக்கு நாங்கள் ஒன்றும் சொல்ல வேண்டியது இல்லை. ஓபிஎஸ்ஸுக்கும் எங்களுக்கும் இனி எந்தத் தொடர்பும் கிடையாது. அதிமுக எழுச்சியோடு கட்சிப்பணியை ஆற்றும். மூத்த நிர்வாகிகளோடு ஆலோசித்து பொதுச்செயலாளராக பொறுப்பேற்பது குறித்து முடிவு செய்யப்படும்.
அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற தொண்டர்களின் ஆசை நிறைவேற்றப்பட்டது. டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கிவிட்டதால் அவருக்கு எங்களைப் பற்றி பேசத் தகுதியில்லை. ஓபிஎஸ் பக்கம் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுவிட்டது. அதிமுகவிற்காக உழைத்தவர்கள் தாராளமாக வரலாம். ஒரு சிலரைத் தவிர ஓபிஎஸ் தரப்பில் இருந்து அதிமுகவிற்கு வருபவர்களை அதிமுக வரவேற்கும். கடந்த காலத்தில் இந்த ஆட்சி 2 மாதங்கள் நீடிக்குமா, 4 மாதங்கள் நீடிக்குமா என்று எதிர்க்கட்சிகள் பேசி வந்தன. ஆனால், நான்கரை ஆண்டுகள் பொற்கால ஆட்சியை வழங்கினேன். அதிமுக இப்பொழுது ஒன்றாக வந்துள்ளது. அதிமுக தான் எதிர்காலத்தில் ஆட்சி அமைக்கும். டிடிவி அணியில் இருந்து பாதிக்கும் மேல் இங்கு வந்துவிட்டார்கள். அதேபோல் ஓபிஎஸ் அணியில் இருந்து நேற்று கூட ஒருவர் வந்தார். மேலும் மேலும் இங்கு வருவார்கள்” எனக் கூறினார்.