நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
திமுக, கூட்டணி, தொகுதிப்பங்கீட்டை முடித்து வேட்பாளர் தேர்வை தீவிரப்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தி வந்த தேமுதிக, பாமக திடீரென பாஜகவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாஜக கூட்டணியில் உள்ள தமாகா, தமமுக, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. டி.டி.வி.தினகரனின் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணியுடன் கூட்டணி வைக்கவும் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. அதேநேரம் சமத்துவ மக்கள் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக அண்மையில் நடிகர் சரத்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
பாஜக-சமத்துவ மக்கள் கட்சி இடையே விரைவில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய அறிவிப்பாக தனது கட்சியான சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார் சரத்குமார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. காமராஜர் போல மோடி ஆட்சி செய்வதாக தெரிவித்துள்ள சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தது கட்சியின் முடிவல்ல என்றும் இது மக்கள் பணிக்கான தொடக்கம் என விளக்கம் அளித்துள்ளார்.