
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பாஜக தலைமையிலிருந்து கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியைத் தக்க வைக்க ஆளும் பாஜகவும், ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகளும் தீவிரமாகக் களப்பணியாற்றி வருகின்றனர். அந்தந்த கட்சித் தலைவர்கள் கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக கர்நாடக மாநில பாஜக மேலிட இணைப் பொறுப்பாளராகத் தமிழ்நாட்டின் பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மாநிலத்தின் மேலிடப் பொறுப்பாளராக மத்திய கல்வித்துறை அமைச்சர் தெர்மேந்திர பிரதான் நியமிக்கப்பட்டுள்ளார் என பாஜக தலைமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சிக்கான கட்டமைப்பில் ஒரு மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் பொழுது அந்த மாநிலத்தின் தேர்தல் பணிகளைக் கண்காணிப்பதற்கும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கும் அருகில் உள்ள மாநிலங்களில் உள்ள பாஜகவினர் மேலிடப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள். தமிழகத்திற்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மேலிடப் பொறுப்பாளராக சி.டி. ரவி உள்ளார். தமிழகத்தில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவை வழி நடத்தவும், பாஜக சார்பில் பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது உள்ளிட்ட செயல்களை மேலிடப் பொறுப்பாளர்கள் தான் மேற்கொள்வார்கள்.
மேலும் அண்ணாமலை, கர்நாடக மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியதும் அம்மாநில அரசியல் குறித்து அண்ணாமலை அறிந்து வைத்திருப்பார் என்பதாலும் இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.