சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், சசிகலா தண்டனை அனுபவித்து வருகிறார். நீதிமன்ற உத்தரவுப்படி அபராதத் தொகை, 10 கோடியே 10 ஆயிரம் ரூபாய் செலுத்தியிருந்தார். ஆனால், சசிகலா விடுதலை விவகாரத்தில் கர்நாடக சிறைத்துறை இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் உள்ளது.
இதனிடையே, ஜனவரி 27ல் விடுதலை ஆவார் என கர்நாடக சிறைத்துறை ஏற்கனவே தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவித்திருந்தது. இருப்பினும் அவர் முன்கூட்டியே விடுதலையாவார் என்றும் பரபரப்பாக அவரது ஆதரவாளர்களால் பேசப்பட்டது.
சசிகலா விடுதலை தொடர்பாக அவருக்கு சிறைத்துறை சார்பில் எந்தவித அதிகாரப்பூர்வத் தகவலும் வரவில்லை என்றும் சிறைத்துறையின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் அவரது வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன் தெரிவித்திருந்தார்.
சட்டப்பேரவைத் தேர்தல்வரவுள்ள நிலையில், சசிகலா விடுதலை தங்கள் கட்சிக்குப் பெரும் ஆதரவு கிடைக்கும் என்று அமமுகவினர் சொல்லி வந்தனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அமமுகவுக்கு 'குக்கர்' சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியபோது, சசிகலாவையும், டி.டி.வி தினகரனையும் புகழ்ந்து அக்கட்சியினர் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்தநிலையில், சசிகலா விடுதலை நாளன்று, பின்பற்ற வேண்டிய நடவடிக்கை குறித்து, கர்நாடக உள்துறை, பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்துக்கும் பெங்களூர் மாநகர போலீசுக்கும் அறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கையில், சசிகலா விடுதலை செய்யப்படும் தேதியை சிறை நிர்வாகம் முடிவு செய்து அறிவிப்பதற்கு முன்பு, இரண்டு நாட்களுக்கு முன்பாகவே தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். சசிகலா விடுதலை செய்யும்போது அவரை அழைத்துச் செல்ல ஏராளமான தொண்டர்கள் வரலாம். அன்றைய தினம் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் சிறைப் பகுதிக்கு வராத வகையில், எல்லையில் தடுத்து நிறுத்த வேண்டும். அவரது பாதுகாப்பைக் கருதி தாமதமாக விடுதலை செய்யவும் திட்டமிட வேண்டும்.
மேலும், அவரை கர்நாடக தமிழக எல்லையான அத்திப்பள்ளி வரை பாதுகாப்புடன் அழைத்துச் சென்றுவிட்டு வர வேண்டும். மேலும் அன்றைய சூழ்நிலையைப் பொறுத்து, சில மாற்றங்கள் செய்யவும் சிறைத்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.