அம்மா பேரவை மாநில இணை செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். மேலும் கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், அதிமுகவில் இருந்துவிலகுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் தோப்பு வெங்கடாசலம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமைச்சர் கே.சி.கருப்பணன் உடனான கருத்து வேறுபாடு காரணமாக இந்த முடிவை தோப்பு வெங்கடாசலம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 12.05.2019 சனிக்கிழமை பெருந்துறையில் உள்ள வீட்டில் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார் தோப்பு என்.டி.வெங்கடாசலம்.
பேட்டியின்போது, நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் தொகுதியில் எம்.எஸ்.எம். ஆனந்தன் போட்டியிட்டார். அவர் அ.தி.மு.க. வேட்பாளர். அவருக்கு பெருந்துறை தொகுதி முழுவதும் நானும், அ.தி.மு.க.வின் அனைத்து தொண்டர்களும் தீவிரமாக வேலை செய்தோம்.
ஆனால், இந்த தொகுதியின் மாவட்ட செயலாளரும், மாவட்டத்தின் அமைச்சருமாக இருக்கிற கே.சி.கருப்பணன் அ.தி.மு.க.வுக்கு வாக்கு சேகரிக்கும் வேலையை விட்டு, தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாகவும், அ.ம.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாகவும் அவரது ஆதரவாளர்கள் மூலம் வேலை செய்தார். இது இங்குள்ள அ.தி.மு.க. தொண்டர்கள், கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் அப்பட்டமாக தெரியும்.
தேர்தலின் போது பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க. அதிக வாக்குகள் பெற்றுவிடக்கூடாது. அதன் மூலம் என்மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டார். அவர் மாவட்ட செயலாளராக பொறுப்பு ஏற்றது முதல் கட்சி தொண்டர்களை சந்திப்பது இல்லை. ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வுக்கு எதிராக பணியாற்றியவர்களுக்கு அவருடைய வீட்டில் அழைத்து விருந்து வைத்தார்.
அமைச்சர் பதவியை வைத்து அவர் கட்சிக்கே துரோகம் செய்து வருகிறார். இதுபோன்றவர்களை கட்சிக்குள் வைத்திருக்கலாமா என்று கட்சி தலைமை முடிவு எடுக்க வேண்டும். அவர் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும், கட்சிக்கு எதிராக பணியாற்ற அவரது ஆதரவாளர்களுக்கு கட்டளையிட்டது உள்ளிட்ட எல்லா விவரங்களையும் ஆதாரத்துடன் சேகரித்து கட்சி தலைமைக்கு அனுப்பி உள்ளேன். கட்சியை அழிக்கப்பார்க்கும்போது எங்களால் பொறுமையாக இருக்க முடியவில்லை என்றார்.