திராவிட மாடல் வந்த காரணத்தினால் ஆளுநர் சொல்லும் சனாதனம் காலாவதியாகிவிட்டது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தனியார் ஆங்கில நாளிதழுக்கு நேர்காணல் கொடுத்திருந்தார். அதில் அவர் திமுக அரசு குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார். குறிப்பாக, “ஒரே நாடு ஒரே பாரதம் கொள்கைக்கு எதிராக இந்த திராவிட மாடல் கொள்கை இருக்கிறது. திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை. அதனை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார். இதற்கும் அவர் தெரிவித்திருந்த மற்ற கருத்துக்களுக்கும் பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த உயர்க்லவித்துறை அமைச்சர் பொன்முடி, “ஆளுநராக இருப்பவர்கள் அரசியல் பேசுவது தவறான ஒன்று. அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா? இல்லை. இங்கு சனாதனம் தான் காலாவதியானது. திராவிட மாடல் வந்த காரணத்தினால் ஆளுநர் சொல்லும் சனாதனம் காலாவதியாகிவிட்டது. காலாவதியாக வேண்டியது ஆளுநர் பதவி. திராவிடம் தமிழ்நாட்டில் மட்டும்தான் இருந்து வந்தது. இப்போது இந்தியா முழுவதும் பரவி வருகிறது. திராவிடம் என்பது மனிதநேயத்திற்காக சமூக நீதிக்காக மக்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்; ஆண் பெண் சமம் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் திராவிட மாடல். இது யாரையும் எதிர்த்து உருவாக்கப்பட்ட ஒன்றல்ல” எனக் கூறினார்.