Skip to main content

“வெற்றிக் கூட்டணி அமையப்போகிறது” - எடப்பாடி பழனிசாமி!

Published on 23/02/2025 | Edited on 23/02/2025

 

A winning alliance is about to be formed Edappadi Palaniswami

அதிமுக தலைமையிலான சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடும் இந்த வேளையில், ‘ஜெயலலிதாவின் புகழ் ஓங்குக’ என்ற வாழ்த்தொலி உள்ளத்திலும், இல்லத்திலும் எதிரொலிக்கிறது. பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையிலும், எல்லா நேரத்திலும் தாயாகவும், சகோதரியாகவும், உற்ற தோழமை கொண்டும், தனி வாழ்விலும், பொது வாழ்விலும் இமயம்போல் உயர்ந்து விளங்கிய ஜெயலலிதாவை, ஒரு நாளின் ஒவ்வொரு நிகழ்விலும், நகர்விலும் தமிழ் நாட்டு மக்கள் நினைத்துப் பார்க்கின்றார்கள்.

ஜெயலலிதாவின் அரசு எவ்வளவு எளிமையாகவும், மக்களின் தேவை அறிந்தும் நடைபெற்றது என்பதையும்; இன்றைய திமுக அரசு எப்படியெல்லாம் மக்களை அலைக்கழித்து, அஞ்சி, அஞ்சி வாழச் செய்கிறது என்பது பற்றியும், தமிழ் நாடு முழுவதும் மக்கள் பேசுகிறார்கள். எப்போது தேர்தல் வரும், ஜெயலலிதாவின் அரசை எப்போது மீண்டும் அமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். மிகச் சிறந்த நிர்வாகியாகவும், மத்திய - மாநில உறவுகளை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதில் தெளிவான சிந்தனையும், செயல் திட்டமும் கொண்டவராகவும், தமிழ் நாட்டின் உரிமைகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தவர் ஜெயலலிதா.

பெண் கல்வி, பெண் விடுதலை, பெண்களுக்கு சம உரிமை, பெண்களின் பாதுகாப்பு, பெண்களுக்கான சமூக, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் தனி கவனம் செலுத்திய ஜெயலலிதாவின் பெண்களுக்காகவும், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் கொண்டு வந்த அற்புதமான திட்டங்களையெல்லாம் திமுக அரசு சீர்குலைத்து நிறுத்திவிட்டது. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி நடைபெற்ற நேரத்தில் எல்லாம், காங்கிரஸ் - திமுக கூட்டணியின் மத்திய அரசு நிதி நெருக்கடியைக் கொடுத்தும். மாநில அரசின் கோரிக்கைகளை கிடப்பில் போட்டும் இம்சை அரசாக இருந்ததை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.

பேரறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சிக் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு அதிமுக அரசை நிதி நெருக்கடிக்குத் தள்ளி, நிலைகுலையச் செய்ய வேண்டும் என்ற கெடுமதியுடன், திமுக அங்கம் வகித்த மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டது. இருந்தபோதிலும், தனது நிர்வாகத் திறமையால் அனைத்து சவால்களையும் சமாளித்து ஏராளமான நலத் திட்டங்களை தமிழ் நாட்டு மக்களுக்கு வழங்கியவர் ஜெயலலிதா. இன்றைக்கு, திமுக அரசு இருமொழிக் கொள்கையை காப்பாற்றக்கூட திறனற்றதாக உள்ளது. மிகப் பெரிய எண்ணிக்கையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்களைக் கொண்டதாக இருந்தாலும், தமிழ் நாட்டின் உரிமைகளைக் காப்பாற்றுவதற்கு திறனற்ற அரசாக இருந்து கொண்டிருக்கிறது. பொழுது விடிந்து, பொழுது போனால், தமிழ் நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும், ஏன் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பற்ற நிலையும், பாலியல் வன்கொடுமைகளும் அரங்கேறிய வண்ணம் உள்ளன.

A winning alliance is about to be formed Edappadi Palaniswami

நான்கு திசைகளிலும் தினந்தோறும் கள்ளச் சாராயம், போதைப் பொருள் புழக்கம், வெட்டு, குத்து, கொலை என்று சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. உண்மைகளை எடுத்துச் சொல்வோருக்கு வாய்ப் பூட்டு போடப்படுகிறது. இந்த அவலங்களை எல்லாம் மாற்ற வேண்டும், தமிழ் நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ வேண்டும், தமிழ் நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்து மக்கள் மகிழ்ச்சியாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என்றால், அதற்கு ஒரே தீர்வு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் நல்லாட்சிகளைப் போல, மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும். நான் செல்லும் இடங்களில் எல்லாம் வெள்ளம் போல் திரண்டு வரும் அதிமுக தொண்டர்ளையும், தமிழ் நாட்டு நலன் நாடும் மக்களையும் பார்க்கையில், அதிமுக ஆட்சியே அடுத்து மலரப்போகும் நல்லாட்சி என்ற நம்பிக்கை என்னுள் ஆழமாக வேரூன்றி இருக்கின்றது.

இன்றைக்கு, அதிமுக கொள்கை வீரர்களின் கூடாரமாகத் திகழ்கிறது. பதவிக்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும் கட்சியை காட்டிக் கொடுக்கத் தயாராகி இருந்த திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும், கற்பனைகளும் காகித ஓடம் போல் கால வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன. ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா?. களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா?. விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா?. முடியாது, முடியாது என்று நீங்கள் முழங்குவது கேட்கிறது. ‘அதிமுக தான் உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இயக்கம். இந்த இயக்கம் இருக்கின்றவரை, நான் இருக்கின்ற வரை இந்த இயக்கம் தமிழர்கள் வாழ்வு வளம்பெற செயல்படும். எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும்’ என்று ஜெயலலிதா சூளுரைத்தார்.

 A winning alliance is about to be formed Edappadi Palaniswami

அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள் தான் ஜெயலலிதாவின் பிறந்தநாள். அதிமுக தலைமையிலான சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்