எடப்பாடி தலைமையில் கட்சியில் இணைவதற்கு வாய்ப்பில்லை என்றுதான் சொன்னேன். கூட்டணியில் சேருவீர்களா என்றால் அது காலத்தின் கட்டாயம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன் சென்னை ராயப்பேட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆரம்பத்திலிருந்தே என் மேல் எந்த தவறும் இல்லை. டெல்லிக்கு பயந்து என்னை கட்சியை விட்டு நீக்கியவர்கள் அவர்கள்தான். ஆர்.கே. நகர் வேட்பாளராக இருந்த என்னை கட்சியை விட்டு நீக்கினார்கள். நாங்கள் அன்றே சொன்னோம்.
ஜெயலலிதாவின் கட்சியை மீட்கவும் அவரின் ஆட்சியை மீண்டும் அமைக்கவும் ஜெ.வின் உண்மையான தொண்டர்கள் இணைந்து உருவாக்கிய இயக்கம்தான் அமமுக. தேர்தலில் ஜெயிக்கவில்லை என நீங்கள் சொல்லலாம். ஜெயிக்கவில்லை தான். ஆனால் நாங்கள் சோர்ந்து போகமாட்டோம். வருமானத்திற்காக பதவிக்காக இருந்தவர்கள் எல்லாம் போய்விட்டார்கள். இப்பொழுது இருப்பவர்கள் லட்சியத்திற்காக இருப்பவர்கள்.
உறுதியாக நாங்கள் வெற்றி பெறுவோம். எடப்பாடி தலைமையில் கட்சியில் இணைவதற்கு வாய்ப்பில்லை என்றுதான் சொன்னேன். கூட்டணியில் சேருவீர்களா என்றால் அது காலத்தின் கட்டாயம். செல்லூர் ராஜு உண்மையைப் புரிந்து சொல்கிறார். எல்லாம் ஓரணியில் திரண்டு திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கிற கட்சியுடன் கூட்டணி வைத்தால்தான் திமுகவை வீழ்த்த முடியும். யார் தலைமையில் கூட்டணி என்பது அன்றுதான் முடிவு செய்ய முடியும்” என்றார்.