அமமுகவில் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு அமமுகவில் நெருக்கம் காட்டாமல் இருந்து வந்த தங்க தமிழ்ச்செல்வன் சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, திமுகவில் இணைந்தார். பிறகு தேனியில் மிகப்பெரிய கூட்டத்தை நடத்தி ஆதரவாளர்களை திமுகவில் இணைத்தார். மேலும் திமுகவில் இணைந்த ஆதரவாளர்கள் பட்டியலையும் கொடுத்தார்.
அமமுகவில் தன்னுடன் இருந்த செந்தில்பாலாஜி தேர்தலுக்கு முன்பே போனதால் திமுகவில் எம்எல்ஏ சீட்டு வாங்கி, எம்எல்ஏ ஆகிவிட்டார். தற்போதைக்கு எந்த தேர்தலும் வரப்போவதில்லை, அமமுகவில் இருந்தபோது ஊடகங்களில் சுதந்திரமாக பேட்டி அளித்துக்கொண்டிருந்த தனக்கு, திமுகவில் அதற்கு இணையாக ஒரு பொறுப்பு வந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார்.
இந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வனை திமுக கொள்கைப் பரப்பு செயலாளராக நியமித்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக கொள்கைப் பரப்பு செயலாளர்களாக பணியாற்றி வரும் திருச்சி சிவா, ஆ.இராசா ஆகியோர்களுடன் இணைந்து கழக சட்ட திட்ட விதி 26ன்படி திமுக கொள்கைப் பரப்பு செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமிக்கப்படுகிறார் என்று கூறியுள்ளார்.
தனக்கு கொள்கைப் பரப்பு செயலாளர் பதவி வழங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார் தங்க தமிழ்ச்செல்வன்.