விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் நடைபெற்ற தேசம் காப்போம் பேரணியில் பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் "70 வயதுவரை நடித்து முடித்தவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வர விரும்பும்போது, 30 ஆண்டுகளாக மக்கள் தொண்டாற்றி வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஆட்சிக்கு வரக்கூடாதா என கேள்வி எழுப்பி நடிகர் ரஜினிகாந்தை நேரடியாக சீண்டினார். மேலும் அம்பேத்கர் பேரன் பிரகாஷ், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் அடுத்த மாதம் நடத்தும் பேரணியில் விடுதலைச் சிறுத்தைதள் கட்சி பங்கேற்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, "இவர் என்ன சாதாரண நபரா? சரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர். டில்லியில் இருந்து கொண்டு தென் மாவட்டங்களை தீ பிடிக்க வைப்பேன் என்று பேசிய மாவீரர். எல்லாம் தமிழகத்தின் தலைவிதி" என்று கூறி திருமாவளவனை விமர்சித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்தை ஹெச் ராஜா வெகுவாக பாராட்டி இருந்தார் என்பதும் அவருக்கு ஆரவாக தொடர்ந்து ஹெச் ராஜா குரல் கொடுத்து வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.