Skip to main content

''அத்துமீறி கைது செய்வதை சகித்துக்கொள்ள முடியாது'' - பாமக ராமதாஸ் கண்டனம்!

Published on 21/12/2021 | Edited on 21/12/2021

 

 arrests cannot be tolerated" - pmk Ramadas condemned!

 

நேற்று முன்தினம் (19.12.2021) ராமநாதபுரம் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிய நிலையில், அன்று மாலையே மேலும் 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது தொடர்பான செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைக் கண்டித்து ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டுள்ளனர். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ரயில் மறியலில் ஈடுபடப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், மீனவர்கள் பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 14 பேரை சிங்களக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 55 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதால் ஏற்பட்டுள்ள அதிர்ச்சியும், கவலையும் விலகுவதற்கு முன்பே மேலும் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. சிங்களப்படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

 

 arrests cannot be tolerated" - pmk Ramadas condemned!

 

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 14 பேர் இரு விசைப்படகுகளில் வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே நேற்றிரவு மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 14 மீனவர்களும் ரணதீவு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதான மீனவர்கள் 14 பேரும் எல்லை தாண்டி மீன்பிடிக்கவில்லை; அவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்தான் மீன் பிடித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை சிங்களப் படையினர் அத்துமீறி கைது செய்திருப்பதை சகித்துக்கொள்ள முடியாது.

 

சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்யக் கோரி அங்குள்ள மீனவர் அமைப்பினர் இராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் போராட்டம் நடத்தினார்கள்.  காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தையும் தொடங்கியுள்ளனர். அதேபோல், ஜெகதாப்பட்டினம் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி அங்குள்ள மீனவர் அமைப்பினரும் இன்றுமுதல் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, கைது செய்யப்பட்டுள்ள 69 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

 

வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் அதிக எண்ணிக்கையில் கைது செய்யப்படுகிறார்கள். இந்தியா அளிக்கும் அழுத்தம் காரணமாக அடுத்த சில வாரங்களில் அல்லது மாதங்களில் அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனாலும் அவர்களின் படகுகளை இலங்கை அரசு திரும்பத் தருவதில்லை. அதனால், அந்த படகுகளை நம்பியுள்ள மீனவர்கள் நிரந்தரமாக வாழ்வாதாரம் இழக்கின்றனர். அதுமட்டுமின்றி, கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்படும் வரை அவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் வறுமையில் வாடுகின்றனர். இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறல்களை தாங்கிக்கொள்ள முடியாத பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் வேறு தொழில்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்கின்றனர். இத்தகைய நிலையைப் போக்க மீனவர்கள் பிரச்சினைக்கு அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

 

இலங்கைக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான கடல் எல்லை மிகவும் குறுகியதாகும். பல நாடுகளுக்கு இடையில் உள்ளது போன்ற வரையறுக்கப்பட்ட சர்வதேச கடல் எல்லை இந்தப் பகுதியில் கிடையாது. அதனால் மீன்வளத்தைத் தேடி இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதும், இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் நுழைவதும் இயல்பான ஒன்றுதான். வாழ்வாதாரம் தேடுவதை தவிர, இதில் அத்துமீறல்கள் எதுவும் இல்லை. அதனால் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தாலும் கூட கைது செய்வது தேவையற்றது. மாறாக, இரு நாட்டு கடல் பகுதிகளில் தமிழ்நாடு, இலங்கை மீனவர்கள் முறை வைத்து மீன்பிடிக்க அனுமதிப்பதுதான் நியாயமான, சாத்தியமான தீர்வாக இருக்கும்.

 

இதுகுறித்து விவாதிப்பதற்காக இரு நாட்டு அரசுகளின் வழிகாட்டுதலில் இரு தரப்பு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுக்கள் நடைபெற்று வந்தன. அதில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் எட்டப்பட்ட நிலையில், 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தில்லியில் நடத்தப்பட்ட இரு தரப்பு பேச்சுகளுக்கு பின்னர் அடுத்தக்கட்ட பேச்சுக்கள் நடத்தப்படவில்லை. இத்தகைய பேச்சுகள் தொடர்ந்தால் தமிழ்நாடு - இலங்கை மீனவர்கள் சிக்கலுக்கு சாத்தியமான நிரந்தரத் தீர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

 

எனவே, உடனடியாக இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் 69 பேரையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இப்போது கைது செய்யப்பட்டவர்களின் படகுகள் உட்பட இலங்கை அரசு வசம் உள்ள தமிழக மீனவர்களின் அனைத்து படகுகளையும் மீட்க வேண்டும். அத்துடன் மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு காண இரு தரப்பு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுகளை மீண்டும் தொடங்குவதற்கும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்