
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணியை சுற்றுச் சுவருடன் கூடிய மைதானத்தில் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடத்த நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்த நிலையில் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் நீதிமன்றத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாடியது. இதன்பின் பல கட்ட நீதிமன்ற வழக்குகள் மற்றும் விசாரணைகளைத் தாண்டி இறுதியாக 6 இடங்களைத் தவிர 44 இடங்களில் பலத்த கட்டுப்பாடுகளோடு நிகழ்வை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகளை ஏற்காத ஆர்.எஸ்.எஸ். மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், சபீக் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. உள் அரங்கு கூட்டமாக நடத்துவதற்கு தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், வீதி மற்றும் சாலைகளில் அணிவகுப்பு பேரணியாக நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், உள் அரங்கு கூட்டமாக நடத்த வேண்டும் என்ற தனிநீதிபதியின் உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது. மேலும், காவல்துறை விதிக்கும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றத் தயாராக இருப்பதாகவும் ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கில் காவல்துறையினர் சார்பில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காப்பது தங்கள் கடமை; அதே நேரத்தில் சமூகத்தில் சில பிரச்சனைகள் ஏற்படாமல் தடுப்பது என்ற நோக்கத்தில் தான் அனுமதி மறுக்கப்பட்டது. உள் அரங்கு கூட்டமாக நடத்துவதற்கு விருப்பம் இல்லை என அறிவித்துவிட்டு மேல்முறையீடு செய்தது உகந்தது அல்ல என வாதிடப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஆர்.எஸ்.எஸ் தரப்பு, உள் அரங்கு கூட்டம் நடத்துவதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும் சாலையில் பேரணி நடத்தவே விருப்பம் என்றும் காவல்துறையின் விதிமுறைகளைப் பின்பற்றுவதாகவும் தெரிவித்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். இது தொடர்பான வழக்குகளைத் தள்ளுபடி செய்து ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்துள்ளனர். மேலும் யார் மனதையும் புண்படுத்தும் வகையிலும் பாதிக்கும் வகையிலும் கோஷங்களை எழுப்பக்கூடாது என ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு அறிவுரை வழங்கியுள்ளது. சட்டத்தை பேணிக் காக்கிற அதே நேரத்தில் கருத்துரிமை, பேச்சுரிமையைத் தடுக்காத வகையில் செயல்பட வேண்டும் என காவல்துறைக்கு அறிவுறுத்திய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு., ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்த மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் அதனை முறையாகப் பரிசீலித்து அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.