Skip to main content

‘வாலை நீட்டினால், வசமாக வாங்கிக் கட்ட நேரிடும்..!’ - பாஜக சி.டி.ரவி மீது திமுக கடும் தாக்கு..!

Published on 15/02/2021 | Edited on 15/02/2021

 

dddd

 

தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி சமீபத்தில் சென்னையில் பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம், “காங்கிரஸ், தி.மு.க. தமிழ்நாட்டின் நிரந்தர எதிரிகள். ஊழல், வாரிசு அரசியல்தான் திராவிட அரசியலா?. பெண்களுக்குத் தொல்லை கொடுப்பது, இந்து கடவுள்களை இழிவுபடுத்துவது, தமிழ் கலாசாரத்தைச் சீரழிப்பதுதான் திராவிட கலாச்சாரமா?” எனப் பேசினார்.

 

இந்தநிலையில் திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான ‘முரசொலி’யில், ‘சி.டி.ரவியே! அந்த அரசியல் என்ன அரசியல்?’ என்ற தலைப்பில் சிடி.ரவியின் பேச்சைக் கண்டித்துப் பதிவிடப்பட்டுள்ளது. அதில், ‘தமிழக பாஜகவுக்கு மேலிடப் பொறுப்பாளராக, சி.டி.ரவி எனும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டு பாஜக தலைவர்தான் அரைவேக்காட்டு அரசியல்வாதி என்று நினைத்திருந்தோம். மேலிடப் பொறுப்பாளரான இவரோ, அரைவேக்காடு கூட அல்ல, கால்வேக்காடாக இருப்பார் போல தெரிகிறது. 

 

அவர் செய்தியாளர் பேட்டி ஒன்றில், வாரிசு அரசியல்தான் திராவிட அரசியலா? என எதையோ கண்டுபிடித்தது போல உளறிக் கொட்டியிருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் என்ன அரசியல் நடக்கிறது என்பது தெரியாமலோ, அங்கே அதைக் கேட்டிட வக்கற்றோ, தமிழகத்தில் வந்து தனது அரசியல் கால்வேக்காட்டுத்தனத்தைக் காட்டியிருக்கிறார்.

 

இவர் சட்டமன்ற உறுப்பினராக உள்ள கர்நாடக மாநிலத்தில், எடியூரப்பா மாநில முதலமைச்சர், அவருடைய ஒரு மகன் விஜயேந்திரா, பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர். மற்றொருவரான ராகவேந்திரா, பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர். கர்நாடக பாஜகவில் நடைபெறும் இந்த அரசியலுக்குப் பெயர் என்ன என்பதை சி.டி.ரவி கூறுவாரா? 

 

அங்கே வாலை ஆட்டாமல் சுருட்டிக்கொண்டிருந்துவிட்டு, தமிழகத்திற்குள் வாலை நீட்டுகிறார். இடம் தெரியாமல் குரைக்கிறார். சி.டி.ரவிக்குத் தெரிவித்துக்கொள்கிறோம், தமிழக அரசியல் களம் வேறுபட்டது. இங்கு பிறந்த குழந்தை கேட்கும் தாலாட்டே அரசியல் கலந்தது. ரவி வாலை நீட்டினால், வசமாக வாங்கிக் கட்ட நேரிடும்.’ இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்