இந்திய சுதந்திர தின 75ம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா மற்றும் விஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு பல்வேறு தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதிப்பது மத நல்லிணக்கத்துக்கு பேராபத்து என நாம் தலைவர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருந்தார். தமிழ்நாட்டை அமளிக்காடாக்க யாரும் துனை போக வேண்டாம் என திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி கண்டனம் தெரிவித்திருந்தார்.
கடந்த சில தினங்கள் முன் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், “ஆர் எஸ் எஸ் அமைப்பினருக்கு அணிவகுப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வந்துள்ளது. இதுவரை வடமாநிலங்களில் காணப்பட்ட காட்சிகள் இப்போது தமிழகத்தில் காணப்படுகிறது. ஜனநாயகம் என்னும் பெயரில் சங்பரிவார் கும்பல் தமிழகத்தில் மதவெறி அரசியலை விதைக்க முனைந்திருக்கிறார்கள். இதற்கு நீதிமன்ற அமைப்புகளே துணை போவது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு மிகுந்த எச்சரிக்கையோடு இத்தகைய பிரச்சனைகளை கவனிக்க வேண்டும்” எனவும் கூறியிருந்தார்.
இது குறித்து ட்விட்டர் பதிவில் “ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடைவிதிக்க வேண்டும். காந்தி பிறந்த நாளன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தமிழ்நாடு முழுவதும் பேரணி நடத்துகின்றனர். இந்த பேரணி மத அடிப்படையில் மக்களை பிளவுப்படுத்தும் சதியாகத்தான் உள்ளது. தமிழக முதல்வர் இதில் தனி கவனம் செலுத்தி பேரணிக்கு தடைவிதிக்க வேண்டும்” எனவும் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்ப பெறக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் மத நல்லிணக்கத்தை குழைத்து, பிரித்தாளும் கொள்கையை பின்பற்றுவது ஆர் எஸ் எஸ் எனவும் கூறியுள்ளார்.