
தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து பேசி வருகிறார். அதில், திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, சம்பிரதாயத்திற்கு இரண்டு... மூன்று... அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டிருக்கிறார்கள். அதேபோல் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது எனக் குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
இதற்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 222 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக ஆட்சி பொறுப்பேற்று 4 மாதமே ஆன நிலையில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் சொன்னது மட்டுமின்றி சொல்லாததையும் செய்துகொடுத்துள்ளது திமுக அரசு'' எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னை பசுமை வழிச்சாலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ''அவர்கள் ஆட்சியில் அவர்கள் என்னனென்ன தகிடுதத்தங்களை எல்லாமே செய்திருக்கிறார்களோ... பாம்பின் கால் பாம்பறியும் என்பதைப்போல தாங்கள் செய்த தவறுகளை எல்லாம் இவர்களும் செய்வார்கள் என்று அவராக ஒரு கற்பனை உலகத்தில் நினைத்துக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட அவசியமே எங்களுக்குத் தேவையில்லை. மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின்பால் இருக்கிறார்கள். நான்கு மாதத்திலேயே தமிழ்நாடு முதல்வர் செய்திருக்கக்கூடிய சாதனைகள், அவர் நிறைவேற்றியிருக்கக்கூடிய வாக்குறுதிகள், அவர் எடுத்து வைத்திருக்கக்கூடிய திட்டங்களினால் மக்கள் மிகுந்த நம்பிக்கையும், மிகுந்த ஆதரவு தருகிறார்கள். எனவே யாருடைய பெட்டியையும் யாரும் மாற்றவில்லை. மக்களின் ஏகோபித்த ஆதரவோடு திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான ஆதரவைப் பெற்று வெற்றி பெறுவோம்.

திமுக அரசுக்கு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை எனப் பொய் கூறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. வேண்டுமென்றே இப்படி பொய் கூறி திசை திருப்பி வருகிறார். 2011 லிருந்து 2021 ஆம் ஆண்டு வரை சொல்லியதை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்த தமிழக முதல்வர் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அனைவருக்கும் தெரியும், டி.ஜி.பி நான்கைந்து மாவட்டங்களில் அவரே நேரடியாகச் சென்று அங்கிருக்கும் போலீஸ் அதிகாரிகளிடம் பேசி குற்றங்களைத் தடுப்பதற்கும், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை மீது தகுந்த நடவடிக்கைகளை சட்டப்படி எடுப்பதற்கான நடவடிக்கைகளையும் செய்து வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி அவதூறுகள் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதனால் அவரே அவரை தாழ்த்திக் கொண்டு வருகிறார். தமிழக மக்களை ஏமாளிகளாக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். அதை அவராகப் பார்த்து நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. இப்படி அவர் தொடர்ந்து சொல்வாரே என்று சொன்னால் அவர் சொல்வதற்கான தக்க பதிலடிகள் அவ்வப்போது தரப்படும்'' என்றார்.