வெற்றி பெற்றே தீர வேண்டிய நெருக்கடியில் திமுகவும், கொங்கு மண்டலத்தில் இமேஜை தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் அதிமுகவும் உள்ளதால், நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஒன்றிய மாவட்ட கவுன்சிலர் இடைத்தேர்தல் அரசியல் களத்தில் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த பி.ஆர். சுந்தரம், சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து ராஜிநாமா செய்ததால் இந்தத் தேர்தல்.
திமுக சார்பில் ஏ.ஆர். துரைசாமி, அதிமுக சார்பில் கண்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். பாமக, தேமுதிக, நாதக, மநீம, அமமுக ஆகிய கட்சிகளும் தனித்தும் களம் காண்கின்றன. என்றாலும் திமுக, அதிமுக கட்சிகளிடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
கள நிலவரம் குறித்து பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நேரில் சென்று பார்வையிட்டோம். தேர்தல் நடைபெற உள்ள வெண்ணந்தூர் ஒன்றியம் 6வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 24 கிராம ஊராட்சிகள் இருக்கின்றன. மொத்தம் 54 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே இதுவரை அனைத்து கிராமங்களிலும் இரண்டு சுற்று பரப்புரையை நிறைவு செய்திருக்கின்றன.
இரு கட்சிகளின் தேர்தல் பணிகளும் மூன்றடுக்கு முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திமுகவில், முதல் அடுக்கில் ஒவ்வொரு கிராமத்திற்கும் வெளியூரைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது அடுக்கில் 6 பஞ்சாயத்துக்கு ஒரு ஒருங்கிணைப்பாளர், மூன்றாவது அடுக்கில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி., அமைச்சர் மதிவேந்தன், மேற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ். மூர்த்தி ஆகியோர் கண்காணிக்கின்றனர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் காலை, மாலை வேளைகளில் ர.ர.க்களைச் சந்தித்து ஆலோசனை வழங்குகின்றனர்.
கடந்த நான்கு மாதங்களில் திமுக அரசு நிறைவேற்றிய வாக்குறுதிகளைச் சொல்லி உடன்பிறப்புகள் வாக்கு சேகரிக்கின்றனர். கரோனா நிவாரண உதவித்தொகை 4,000 ரூபாய் வழங்கியதும், பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டமும் மக்களிடையே வெகுவாக கவனம் ஈர்த்துள்ளதைப் பார்க்க முடிந்தது.
அதேநேரம், அதிமுகவினரும் திமுகவின் பொய்யான வாக்குறுதிகள் என்ற தலைப்பில் நீட் தேர்வு, கல்விக்கடன் ரத்து செய்யப்படாதது, குடும்பத் தலைவிக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்காதது, காஸ் சிலிண்டர் விலை குறைக்கப்படாதது உள்ளிட்ட அம்சங்களை அச்சிட்டு விநியோகம் செய்கின்றனர்.
அதிமுகவைக் காட்டிலும் திமுகவுக்கு இந்தத் தேர்தல் கடும் சவாலாக இருக்கும் என்றே சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத திமுக, அதிமுக நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசினர்.
''வெண்ணந்தூர் ஒன்றியம் என்பது அதிமுகவின் கோட்டையாக இருக்கிறது. அதுவும் 6வது வார்டில் மொத்தமுள்ள வாக்காளர்களில் 50 சதவீதம் பேர் கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தினர். இதைக் குறிவைத்தே இந்த தேர்தலில் அதே சமூகத்தைச் சேர்ந்த கண்ணனுக்கு அதிமுக வாய்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வார்டில் மைனாரிட்டியாக உள்ள நாட்டுக்கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஏ.ஆர். துரைசாமியை திமுக நிறுத்தியுள்ளது. மாவட்டச் செயலாளர் ராஜேஷ்குமாரின் உறவினர் இவர்.
திமுகவைச் சேர்ந்த சேகர் பெரியசாமி என்பவர் வெண்ணந்தூர் ஒன்றியக்குழுத் தலைவராக இருந்தபோது, அவரை அப்போது திமுகவின் முன்னோடியாக இருந்த கே.பி. ராமலிங்கத்துடன் கூட்டு சேர்ந்துகொண்டு, சொந்தக் கட்சிக்காரர் என்றும் பாராமல் உள்ளடி வேலை செய்து, ஏ.ஆர். துரைசாமி பதவியைவிட்டு இறக்கினார். அதனால் சேகர் பெரியசாமி இந்தத் தேர்தலில் கட்சி வேலைகளுக்கு வராமல் ஒதுங்கியே இருக்கிறார். அவருடைய ஆதரவாளர்கள் அதிமுகவுக்கு மறைமுகமாக வேலை செய்துவருகின்றனர்.
அக்கரைப்பட்டி, தொட்டியப்பட்டி பகுதிகளில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் இந்தமுறை திமுகவைப் புறக்கணித்து, அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர். இதன் பின்னணியில் பாஜக உள்ளது.
அதுமட்டுமின்றி, கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் வாங்கியுள்ள பலருக்கு கடனுக்கான வட்டி, அசல் தொகையைச் செலுத்தும்படி சங்க உறுப்பினர்களுக்கு கூட்டுறவுத்துறை நோட்டீஸ் அளித்துள்ளது. இதை அதிமுகவினர், தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஆளுங்கட்சிக்கு எதிராக பரப்புரை செய்துவருகின்றனர்.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே சுமார் 40 ஆயிரம் வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய் பணம் கொடுக்க தீர்மானித்துள்ளன. இதனால் 4 முதல் 5 கோடி ரூபாய் வரை வாக்காளர்களுக்கு கைமாறும் எனத் தெரிகிறது. என்றாலும் கடைசி நேரத்தில் யார் அதிகமாக வாரி இறைக்கிறார்களோ அவர்கள் வெற்றிபெற்றாலும் ஆச்சரியமில்லை,'' என்கிறார்கள் உடன்பிறப்புகளும், ர.ர.க்களும்.
மொத்தத்தில் வெண்ணந்தூர் ஒன்றிய 6வது வார்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தல் என்பது கட்சி மீதான பற்றுக்கும் சாதி பாசத்துக்கும் இடையிலான போர் என்கிறார்கள் வாக்காளர்கள். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பல இடங்களிலும் இதே நிலவரம்தான்.