தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. நேற்று (19.03.2021) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்ற நிலையில், நேற்று 3 மணியோடு வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. இதுவரை வேட்புமனு தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை 4,500-ஐ கடந்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட 4,567 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 3,818 ஆண்கள், 747 பெண்கள், 2 திருநங்கைகள் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கரூர் தொகுதியில் அதிகபட்சமாக 70 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலனை தற்பொழுது தொடங்கிய நிலையில், மதுரை திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தரப்பில் விதியை மீறி அரசு தரப்பு வழக்கறிஞரை வேட்புமனுக்கு பரிசீலனைக்கு உள்ளே அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆர்.பி உதயகுமார் தரப்பு விதியை மீறி செயல்படுவதாக அமமுக சார்பில் போட்டியிடும் மருது மக்கள் சேவை தலைவர் ஆதிநாராயணன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இதுகுறித்து முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.