தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற உள்ள புகைப்படக் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ஒரு வாரம் நடக்கும் இந்த கண்காட்சியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். இதன் பின் அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தொடர்ச்சியாக விளையாட்டு வீரர்களை சந்தித்து வருகிறேன். உடற்கல்வி கல்லூரிக்கு சென்றிருந்தேன். விளையாட்டு வீரர்களுக்கு தமிழகத்தில் வசதிகள் உள்ளது. ஆனால் இந்த வசதிகள் நம்மிடம் உள்ளது என்ற விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. அதிகமான கோரிக்கைகளை வைத்துள்ளார்கள். சென்னை வேளச்சேரியில் உள்ள அக்வாட்டிக் காம்ப்ளக்ஸில் ஆய்வு நடத்தினோம். அங்கு இருந்தவர்கள் பயிற்சியாளர்கள் வேண்டும் என கேட்டார்கள். அனைத்தையும் முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்று பட்ஜெட்டில் சேர்த்து என்ன செய்ய முடியுமோ அதை கண்டிப்பாக செய்வோம்.
எய்ம்ஸ் கல்லூரி இப்போது வரை அமைக்கவில்லை. மீண்டும் அதே பிரச்சாரத்தை மேற்கொள்வீர்களா என கேட்கிறார்கள். பொறுத்திருந்து பாருங்கள். நேரு உள் விளையாட்டு அரங்கில் விளக்குகள் வேண்டும் என கேட்டுள்ளார்கள். ஒரு மணி நேரம் கூடுதல் பயிற்சி மேற்கொள்ள வெளிச்சம் வேண்டும் என கேட்டுள்ளார்கள். அதற்கான ஆலோசனை போய்க்கொண்டு உள்ளது. ஈரோடு பிரச்சாரத்திற்கு கமல்ஹாசன் தேதி அறிவித்துள்ளார். என்னிடம் நீங்கள் போவீர்களா என கேட்கிறார்கள். நான் போகாமல் இருப்பேனா?” எனக் கூறினார்.