நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படுதோல்வி அடைந்தது. இதனால் அக்கட்சியிலிருந்து பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக தினகரனின் நம்பிக்கையாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். பின்பு அமமுக கட்சி அலுவலகம் நடத்த இடம் கொடுத்த இசக்கி சுப்பையாவும் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவின் இணைந்தார்.
இதனால் தினகரன் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று தினகரன் அறிவித்தார். மேலும் கட்சியை பதிவு செய்து சின்னம் வாங்கிய பிறகு தேர்தலில் நிக்க போவதாகவும் கூறினார். இந்த நிலையில் வேலூர் தேர்தலில் தினகரன் கட்சி களத்தில் இல்லாதது தொண்டர்களை வருத்தமடைய வைத்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் தினகரன் கட்சியை விட மிக குறைந்த வாக்கு சதவிகிதம் வாங்கிய கட்சிகள் போட்டியிடும் நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக கட்சிக்கு அடுத்து வாக்கு பெற்ற தினகரன் கட்சி போட்டியிடாதது வருத்தமளிக்கிறது என்று தொண்டர்கள் கூறிவருகின்றனர்.
மேலும் அமமுக தொண்டர்களை மற்ற கட்சிகள் தங்கள் பக்கம் இழுத்து விடும் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர். இது மட்டுமில்லாமல் ஒவ்வொரு நாளும் தினகரன் கட்சியில் இருந்து மாற்று கட்சியில் இணைவோர் அதிகரித்து வருகின்றனர். இதனால் தொண்டர்கள் தினகரனின் மீது வைத்த நம்பிக்கை குறைந்து விட்டது என்றும் அரசியல் வட்டாரங்களில் சொல்கின்றனர். சமீபத்தில் தினகரன் உறவினர் திவாகரன் தினகரனை தொண்டர்கள் தற்போது நம்புவதில்லை என்று கூறியிருந்தார். மேலும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் ஒன்றாக இணைந்தால் அதற்கு நான் தடையாக இருக்கமாட்டேன் என்றும் தெரிவித்தார்.