அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட உள்ளது.
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, சஞ்சய் குமார் அமர்வு வாசித்தது. அதில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொதுக்குழு செல்லும் என்றால் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும். அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் நீக்கமும் செல்லும் என பழனிசாமி தரப்பினர் கூறி வந்தாலும் பொதுக்குழு செல்லும் என்று சொன்ன உச்சநீதிமன்றம் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சொல்லவில்லை என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர், இத்தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு அதிமுக சட்ட விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல், ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு ஓரிரு தினங்கள் முன் கடிதம் அனுப்பியிருந்தார். அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி நீக்கப்படவில்லை. இந்த பதவிகளுக்கான காலம் 2026 வரை உள்ளது. எனவே, அதிமுக பொதுக்குழுவில் சட்டவிரோதமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் சட்ட விதிகளில் எந்தவித திருத்தமும் செய்யக்கூடாது. இந்த திருத்தங்களை ஏற்றுக்கொண்டால் அது நீதிக்கு அப்பாற்பட்டது. அது மட்டுமின்றி என்னுடைய சட்டப்பூர்வமான உரிமையைப் பாதிக்கும். எனக்கு பெரும் இழப்பையும் ஏற்படுத்தும். ஆகவே, ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்களையும், கட்சி சட்ட விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களையும் ஏற்றுக்கொள்ளக்கூடாது’ எனக் கூறி கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், தற்போது தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் ராம்குமார் ஆதித்தன், சுனில் பழனிசாமி ஆகியோர் டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் மனுத் தாக்கல் செய்தனர். அதில், ‘அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் எங்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அது தற்போது வரை விசாரணையில் உள்ளது. எனவே, ஜூலை 11 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்கக்கூடாது’ எனத் தெரிவித்துள்ளனர். மேலும் ‘கடந்த ஆண்டு ஏப்ரலில் சமர்ப்பிக்கப்பட்ட உட்கட்சித் தேர்தல் முடிவுகள் மற்றும் 2021 டிசம்பரில் திருத்தப்பட்ட கட்சி விதிகளையும் அங்கீகரிக்கக் கூடாது. சிவில் வழக்குகள் முடியும் வரை இரட்டை இலை தொடர்பான எந்த மனுவையும் ஏற்கக் கூடாது’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
தீர்ப்பு இபிஎஸ்ஸுக்கு சாதகமாக வந்தாலும் கட்சியில் சில முடிவுகள் எடுக்க சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.